இந்தாண்டின் கதாநாயகன்!

நடிகர் மம்மூட்டி தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய தலைமுறை கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
நடிகர் மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி

முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டி சிறுவயதில் இருந்தே  நாடகங்களில் நடித்த பயிற்சி இருந்தது, தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகும் போது அவர் சட்டக் கல்லூரி மாணவர். 1971 ஆம் ஆண்டு வெளியான  'அனுபவங்கள் பலிச்சாக்கல்' என்கிற படமே அவருடைய முதல் படம். இப்படத்தில் நடித்து முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் குடும்பத்தின் நெருக்கடி காரணமாக படிப்பை முடித்தார். பின் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய பின்பே மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில்  மலையாள சினிமாவில் பெரிய மாற்றங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தது. தீவிர இலக்கியம் படைத்துக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சினிமாவை நோக்கி வந்தனர். முக்கியமாக எம்.டி.வாசுதேவ நாயர், பத்மராஜன், கே.ஜி ஜார்ஜ்  போன்றவர்கள் மலையாள சினிமாவின் முகத்தை மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்  அவர்களின் நுட்பமான எழுத்துக்கு மிகச்சரியாக பொருந்திப்போனவர் மம்மூட்டி.

இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என ஆறுமொழிகளில் 400 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். சிறந்த நடிப்பிற்காக 3 முறை தேசிய விருதும் 6 முறை மாநில அரசின் விருதும்  பத்மஸ்ரீ மற்றும் இரண்டு கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். தற்போதும் இளம் நடிகர்களுக்கு இணையாக அதே இளமையின் உற்சாகம் கொண்டு நடித்து வருகிறார்.

சினிமா வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்மூட்டி இந்தாண்டு நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸ்சாச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் ஆகிய படங்களில் நாயகனாக நடித்ததுடன் அப்படங்களைத் தயாரித்து ஒரு தயாரிப்பாளாரகவும் வென்றுள்ளார். 

நண்பகல் நேரத்து மயக்கம் இந்தாண்டில்தான் ஓடிடியில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. ரூ.4 கோடியில் தயாரான இப்படம் உலகளவில் ரூ.9.7 கோடியை வசூலித்து லாபத்தைக் கொடுத்தது. அடுத்ததாக மம்மூட்டி கம்பெனி ரூ.15 கோடி இணை தயாரிப்புடன் உருவாக்கிய ரோர்ஸ்சாச் படமும் ரூ.40 கோடி வரை வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், அப்படத்தின் கதை. ஆவியைப் பழிவாங்கும் நாயகனாக மம்மூட்டியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.  குற்றவாளியைத் துரத்திப் பிடிக்கும் கதையாக உருவான ‘கண்ணூர் ஸ்குவாட்’ படம் எதிர்பாராத விதமாக, ரூ.100 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மம்மூட்டியைக் கொண்டு சென்றது.

இந்தத் தயாரிப்புகளின் உச்சமாக தன் பாலின ஈர்ப்பாளராக நடித்த காதல் தி கோர் படமும் வியாபார ரீதியான வெற்றியைக் கொடுத்ததுடன் மம்மூட்டியின் கலை பார்வை எத்தகையது என்பதை அழுத்தமாகக் கூறியிருக்கிறது. நல்ல கதையுள்ள படங்களில் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பார்களா? என்கிற கேள்விகள் இன்னும் சூழ்ந்திருக்கும் நிலையில், மம்மூட்டி தைரியமாக விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் கதைகளின் மீது முதலீடு செய்து வென்றிருக்கிறார். 

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இந்த நான்கு படங்களுக்கும் சேர்த்து ரூ.40 கோடிக்கும் குறைவாகவே முதலீடு செய்து, ரூ.170 கோடி வரை வணிகம் செய்திருக்கிறார் மம்மூட்டி!

இதில், நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸ்சாச், காதல் தி கோர் ஆகிய படங்களில் கதையே நாயகன். இந்தப் படங்களில் யாரை நடிக்க வைத்திருந்தாலும் இதே வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும். ஆனால், மம்மூட்டியே இக்கதைகளை நம்பியதுடன் ஒரே மாதிரியான கமர்சியல் படங்களில் நடிக்காமல் எதார்த்த, பேண்டசி, மாய எதார்த்தம் என கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்று. இந்தியாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான மம்மூட்டி 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையிலிருந்து இந்த ஆண்டு சென்ற உயரம் மிக அதிகம். லிஜோ ஜோஸ் பெல்லிசரி, ஜியோ பேபி போன்ற பரிசோதனைக் கதைகளை நம்பும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி கவனத்தை ஈர்த்ததுடன் புதிய கதைக்களங்களை இயக்கக் காத்திருக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கையையும் அளித்திருக்கிறார். 

புதிய புதிய கதாபாத்திரங்களைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் மம்மூட்டி இந்தாண்டின் சிறந்த கதாநாயகன் என்றால் மிகையாகாது! நடிகராக மட்டமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் 2023-ல் வாகை சூட்டி, ‘மம்மூட்டி கம்பெனி’ நல்ல கதைகளையே தயாரிக்கும் என்கிற நம்பிக்கையை சினிமாவைக் கவனிக்கும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். அடுத்தாண்டு, மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் வெளியாக உள்ள படங்களின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கிய மம்மூட்டி, அவரே சொல்வதுபோல், ‘தேய்த்து தேய்த்து மினுங்கியவன்.. இன்னும் தேய்க்க தேய்க்க தங்கத்தைப்போல் மினுங்குவேன்’ என்பதை உறுதிசெய்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com