2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள்

2023-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. வேறு எந்த ஆண்டுகளிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாகியிருக்கின்றன.
2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள்

 2023-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. வேறு எந்த ஆண்டுகளிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன் என  பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகியிருந்தாலும் சிறிய பட்ஜெட் படங்களும் ரசிகர்களின் ரசனையை கவர தவறியதில்லை.  இந்த ஆண்டு வெற்றி பெற்ற 20 படங்களில் அதிக வெற்றியை கொடுத்தது அறிமுக இயக்குநர்கள் இயக்கிய சிறு பட்ஜெட் படங்கள்தான். இதனை தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.

ஒருகாலத்தில் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் அறிமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பு அளித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது தலைகீழாக மாறிவிட்டது. முதல்படம் வெற்றிப் படமாக அமைந்தால் மட்டுமே அறிமுக இயக்குநர்கள் பக்கம் பெரிய நடிகர்களின் பார்வையே விழுகிறது. அதனால் என்னவோ முதல்படத்திற்காக அறிமுக இயக்குநர்கள் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.

தோல்வியடைபவர்களை யாரும் இந்த உலகில் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்பதைப் போல்தான் முதல் படத்திலேயே தோல்வியை சந்திக்கும் இயக்குநர்கள் ராசியில்லாதவர்கள் என கோலிவுட்டில் முத்திரை குத்தப்படுகிறார்கள். இப்படி எத்தனையோ இயக்குநர்கள் திரையுலகில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் தயாரிப்பாளர்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை பொய்த்துவிடச் செய்யாமல் அறிமுக இயக்குநர்கள் பலர்  இந்த ஆண்டு முதல் படத்திலேயே கோலிவுட்டில் வெற்றி இயக்குநர்களாக முத்திரை பதித்துள்ளனர். 

அயோத்தி :  உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அயோத்தி.  அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கிய இந்த படம் மதத்தை தாண்டி மனிதத்தை உணர்த்தும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்து. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சசிகுமாருக்கு இந்த படம் கம்பேக் படமாகவும் அமைந்தது.

டாடா : சின்னத்திரை நடிகர் கவினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் டாடா. வாழ்க்கையில் பொறுப்பில்லாமல் சுற்றும் நாயகன், தந்தையாக ஆனதுக்குப் பிறகு, வாழ்க்கை அவரை எப்படி மாற்றுகிறது என்பதே படத்தின் ஒருவரி கதை. இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து தன்னுடைய முதல் படத்திலேயே  சிறப்பாக கொடுத்திருந்தார் கணேஷ்.கே.பாபு.

போர் தொழில்: ராட்சசன் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் வெளியான சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இதில் காவல் அதிகாரிகளாக சரத்குமாரும், அசோக் செல்வனும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை பரபரப்பான திரைக்கதையால் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருந்தார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. 

குட் நைட் :  எல்லா மனிதர்களும் தூங்கும்போது தங்களது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னைதான் குறட்டை. அந்த குறட்டையை மையமாக வைத்து ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்து இருந்தார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். படத்தில் நாயகன் மணிகண்டன் எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருப்பார். 

யாத்திசை:  பொன்னியின் செல்வன் படம் வெளியான நேரத்தில் திரைக்கு வந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தப் படம் யாத்திசை. ஏழாம் நூற்றாண்டில், பாண்டியர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் முதன்முதலில் வெளியான படம் என்கிற சிறப்பைப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்ட வரலாற்றுப் படத்தை தந்திருப்பார் தரணி ராஜேந்திரன்.

குய்கோ: குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கம்தான் குய்கோ. இதில் யோகி பாபு, விதார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எதார்த்தமான கதையை கிராமத்து பின்னணியில் கலகலப்பாகவும் அழகாகவும் சொல்லி இருப்பார் இயக்குநர் அருள் செழியன். இவர் 30 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணிபுரிந்து பின்னர் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

பார்க்கிங்: ஒரு பார்க்கிங் இடத்திற்காக இரண்டு ஆண்களுக்கு இடையே எழும் ஈகோ பிரச்னையே பார்க்கிங் படத்தின் கதை. இதில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் அசத்தலான நடிப்பை தந்திருக்கின்றனர். ஒரு சின்ன ஈகோவில் என்னென்ன எல்லாம் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் காண்பித்திருக்கிறார்.

கிடா: தீபாவளி பண்டிகையை பேரனுடன் கொண்டாட நினைக்கும் தாத்தா, தன் பேரன் ஆசைப்படும் புத்தாடையை வாங்க எவ்வாறு எல்லாம் போராடுகிறார் என்பதை நேர்த்தியாக சொல்லியிருப்பார் அறிமுக இயக்குநர் ரா வெங்கட். படத்தில் பூ ராமு மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆயிரம் பொற்காசுகள்: வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட குழி தோண்டும் போது வீட்டின் உரிமையாளரான சரவணனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கின்றன. இந்தப் புதையலை சரவணன் தனது மருமகன் விதார்த்துடன் இணைந்து அரசுக்கு தெரியாமல் தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும்போது ஏற்படும் பிரச்னையே படத்தின் கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் அறிமுக இயக்குநர் ரவி முருகையா.

மார்க் ஆண்டனி வந்த சமயத்தில் ரூ.4 கோடி  வைத்துக்கொண்டு தயவு செய்து சினிமா தயாரிக்க வந்துவிடாதீர்கள் என நடிகர் விஷால் பேசியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு என்னவோ சிறுபட்ஜெட் படங்கள்தான் தமிழ் சினிமாவை உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com