2023-ன் சிறந்த படங்கள்!

இந்தாண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களின் பட்டியல்.
2023-ன் சிறந்த படங்கள்!

தலைக்கூத்தல்: (தமிழ் )

லென்ஸ் படத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் தலைக்கூத்தல். சமுத்திரகனி நடித்த இப்படம்  விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. வயதானவர்களை கருணைக்கொலை செய்யும் முறையான ‘தலைக்கூத்தல்’ என்கிற பழக்கத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவின் மேன்மையை அழகாகப் பேசியது. தன் தந்தையைக் கொல்லச் சொல்லும் உறவினர்களிடமிருந்து ஒரு மகன் நடத்தும் பாசப்போராட்டமாக இதயத்தைக் கனக்கச் செய்த திரைப்படம்.

சித்தா: (தமிழ் )

சித்தப்பா உறவினைப் பேசும் படம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களை உறையச் செய்யும் அளவிற்கான முக்கியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சு.அருண் குமார். சித்தார்த் தயாரித்து நடித்த இப்படம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து பேசியதுடன் ஒரு உணர்ச்சிகர உறவின் தீவிரத்தையும் திரையில் கடத்தி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. படத்தின் வசூல் வெற்றியைத் தாண்டி நடிகர்கள் பாராட்டுகளைப் பெற்றனர்.

கூழாங்கல்: (தமிழ் )

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தயாரான படம் கூழாங்கல். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று சிறந்த அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியீடு செய்ய இந்தாண்டு திரைக்கு வந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு நிகழ்வை சமூக பிரச்னையுடன் இணைத்தது என ஒரு தரமான படத்தை படக்குழு உருவாக்கியிருந்தனர்.  சிறந்த திரை அனுபவத்தைக் கொடுத்த படம் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

நண்பகல் நேரத்து மயக்கம்: (மலையாளம்)

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானதும் இந்திய அளவில் கவனம் பெறத்துவங்கியது. காரணம், படத்தின் கதை. ஜேம்ஸ், சுந்தரம் என்கிற இரு வேறு கதாபாத்திரங்களிலும் நடிகர் மம்மூட்டி சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிற திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

ரேகா: (மலையாளம்)

ஒரு நள்ளிரவில் தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் நாயகன் அவளுடன் உறவு கொள்கிறான். பின், காதலன் வீட்டை விட்டு சென்றதும் அதிகாலையில் நாயகியின் தந்தை இறந்திருப்பது தெரிய வருகிறது. இதனால், கடும் மன சிக்கலுக்கு ஆளாகும் நாயகி, ஊரைவிட்டுச் சென்ற தன் காதலனைத் தேடிச் செல்கிறாள். தன் தந்தை அவராகவே இறந்தாரா இல்லை காதலனால் கொலை செய்யப்பட்டாரா என்கிற கேள்விகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அப்பெண், தன் காதலனைச் சந்தித்து பதிலைக் கண்டுபிடித்தாளா? என்கிற கதையே ரேகா. நாயகியாக நடித்த நடிகை வின்சி அலோசியஸ் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதைப் பெற்று அசத்தினார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் உருவான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த படமாக அங்கீகரிப்பட்டது. இயக்குநர் - ஜித்தின் ஐசக் தாமஸ்

காதல் தி கோர்:  (மலையாளம்)

மம்மூட்டி தயாரித்து நடித்த திரைப்படம் காதல் தி கோர். தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் உருவான இப்படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. காரணம், மம்மூட்டி இப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தன் பாலின விருப்பத்துக்கு மாறாக நடைபெற்ற திருமணத்தால் தன் மனைவியின் வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையும் சீரழிந்துவிட்டது என்பதை உணரும் மாத்யூஸ், தன் அடையாளம் தெரிந்துவிட்டபின் சமூகத்தை எப்படி எதிர்கொண்டார் என்கிற கேள்விகளுடன் காதல் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

டோபி: (கன்னடம்)

வாய்பேச முடியாத, யாருக்கும் அடங்காத நாயகனான டோபி தன் மகளுக்கு வீட்டைக் கட்டுவதற்காக ஒரு குற்றத்தைச் செய்கிறார். அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் அவர் காணாமல் போனதற்கானக் காரணத்தைத் தேடும் காவல்துறை என திரில்லர் வகை படமாக வெளிவந்தது டோபி. இப்படத்தின் நாயகனாக ராஜ்.பி ஷெட்டி நடித்திருக்கிறார். நடிகைகள் சைத்ரா, சம்யுக்தா ஆகியோரின் நடிப்பும் கவனிக்கப்பட்டது. பாசில் அல்சலக்கல் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலிலும் வெற்றிப்படமானது.

சப்த சாகரதாச்சே எல்லோ: (கன்னடம்)

கன்னட திரைப்படங்கள் சமீப காலமாக சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்க படமாக வெளிவந்ததில் சப்த சாகரதாச்சே எல்லோ (ஏழு கடல் தாண்டி) திரைப்படம் முக்கியமான ஒன்று. தன் காதலி நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் நாயகன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறான். ஆனால், சிறை தண்டனையாக 10 ஆண்டுகள் வழங்கப்பட்டதால் அவன் தீவிரமாகக் காதலித்த காதலியை, யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழட்டும் என அவளைப் புறக்கணிக்கிறான். நாயகிக்கும் திருமணம் ஆகிறது. சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் நாயகன் அவளைத் தேடிச் செல்லும்போது நிகழும் பிரச்னைகளும் பரிதவிப்புகளுமாக சைட் ஏ, சைட் பி என இரு பாகமாக வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. நாயகனாக ரக்‌ஷித் ஷெட்டியும் நாயகிகளாக ருக்மணி வசந்தும், சைத்ராவும் அசத்தியிருந்தனர். ரூ. 20 கோடியில் உருவான இப்படம் உலகளவில் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இயக்குநர் - ஹேமந்த் ராவ்.

பலஹம்: ( தெலுங்கு)

தெலுங்கு சினிமாக்கள் என்றாலே அடிதடியை மையமாக வைத்து ஓவர் பில்டப் வகையறாக்கள்தான் என்கிற நிலையை கொஞ்சம் மாற்றிய படமாக இந்தாண்டு வெளியானவைகளில் கவனம் பெற்றது பலஹம் திரைப்படம். குடும்பத்தின் மூத்தவர் ஒருவர் காலமானதும் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகளை மையமாக வைத்து உறவுகளுக்கு இடையே இருக்க வேண்டிய புரிதலையும், சின்ன சின்ன விசயங்களுக்காக எவ்வளவு பெரிய சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பேசிய படம். இயக்குநர் வேணு எல்டாண்டி சாதாரணமான கதையை குறைந்த பட்ஜெட்டில் திரைப்படமாக்கிய விதமும் ஒரு ஊரே நடித்திருந்தது போன்ற காட்சியமைப்புகளும் பெரிதாகப் பேசப்பட்டன.

மஸ்த் மேய்ன் ரெஹனே கா ( Mast Mein Rehene Ka ) - ஹிந்தி

மும்பையில் தனிமையை எதிர்கொள்ளும் இரண்டு வயதானவர்கள், வறுமையால் சூழப்பட்ட இரு இளம் வயதினர் என 4 பேர் வாழ்க்கை எதிர்பாராத தருணங்களில் சிக்கலடைகிறது. ஒருகட்டத்தில் நால்வரின்  வாழ்க்கையிலும் ஒருவரொருவர் குறுக்கிடுகின்றனர். மும்பையைப் போன்ற பெருநகரத்தில் அனுபவிக்கும் தனிமையும் வறுமையுமென இப்படம் மனித உணர்வுகளைக் நகைச்சுவையுடன் கடத்தி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முதியவர்களாக நடிகர் ஜாக்கி ஷெராஃப் மற்றும் நடிகை நீனா குப்தா சிறப்பாக நடித்திருக்கின்றனர். இளைய கதாபாத்திரங்களான அபிஷேக் சவுஹானும் மோனிகா பன்வரும் ரசிக்க வைக்கின்றனர். இயக்குநர் - விஜய் மௌரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com