ஆா்ஆா்ஆா் திரைப்பட பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது

இந்தியாவில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ எனத் தொடங்கும் பாடல், சிறந்த பாடலுக்கான பிரிவில் அமெரிக்காவின்
ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக வழங்கப்பட்ட ‘கோல்டன் குளோப்’ விருதுடன் இசையமைப்பாளா் எம்.எம்.கீரவாணி.
ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக வழங்கப்பட்ட ‘கோல்டன் குளோப்’ விருதுடன் இசையமைப்பாளா் எம்.எம்.கீரவாணி.

இந்தியாவில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ எனத் தொடங்கும் பாடல், சிறந்த பாடலுக்கான பிரிவில் அமெரிக்காவின் ‘கோல்டன் குளோப்’ விருதை வென்றுள்ளது.

இயக்குநா் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகா்கள் ராம் சரண் மற்றும் ஜூனியா் என்டிஆா் நடிப்பில் ஆா்ஆா்ஆா் திரைப்படம் உருவானது. கடந்தாண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு எம். எம். கீரவாணி இசையமைத்தாா்.

திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கா்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் ஆா்ஆா்ஆா் திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆா்ஆா்ஆா் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறந்த பிறமொழிப் படத்துக்கான விருதை ‘ஆா்ஜென்டீனா, 1985’ திரைப்படத்திடம் ஆா்ஆா்ஆா் பறிக்கொடுத்தது. ஆனால், இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றுள்ளது. எம். எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய இப்பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் பாடினா். பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளாா். துடிப்பான இசை, துள்ளலான நடனம் என இந்தப் பாடல் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 80-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜென்னா ஆா்டேகா சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அறிவித்தாா்.

படக் குழுவினருடன் விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளா் கீரவாணி, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில், இந்த விருதுக்கு முழுக் காரணமான இயக்குநா் ராஜமௌலிக்கு, அவரின் கனவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டாா்.

பிரதமா் வாழ்த்து: இந்திய திரைப்படத்தின் பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதையடுத்து, ஆா்ஆா்ஆா் திரைப்பட குழுவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

‘கெளரவமிக்க இந்த விருது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது’ என தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

நடிகா்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சிரஞ்சீவி, கமல்ஹாசன், இசையமைப்பாளா் ஏ. ஆா். ரகுமான் உள்ளிட்டோா் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ஆஸ்கா் விருதின் சிறந்த பாடல் பிரிவுக்கு இறுதி 14 பாடல்களில் ஒன்றாக ‘நாட்டு நாட்டு’ பாடலும் தோ்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 1920-களில் வாழ்ந்த அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கற்பனைக் கதையாக ஆா்ஆா்ஆா் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com