ரசிகர்களைக் காப்பாற்றினாரா? மாவீரன் - திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்களைக் காப்பாற்றினாரா? மாவீரன் - திரை விமர்சனம்

சென்னையில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வரும் ஓவியரான சத்யா (சிவகார்த்திகேயன்) செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் கார்டூனிஸ்டாக வேலைக்குச் சேர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

திடீரென ஒருநாள் சத்யா வசித்து வந்த பகுதி மக்களை அரசியல்வாதி ஒருவர்  மாநகராட்சி நிர்வாகம் மூலம் குடிசை மாற்று வாரியத்தின்  அடுக்ககத்தில் ஒவ்வொருவருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறார்.

முதலில் இதற்கு சத்யா குடும்பத்தினர் மறுத்தாலும் பின் ஒப்புக்கொண்டு புதிய குடியிருப்புக்குச் செல்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக குடிசைப் பகுதியில் சாக்கடைகள், குப்பை மேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் புதிய வீடுகள் நம்பிக்கையை அளிக்கிறது.

ஆனால், அம்மக்கள் குடி வந்த சில நாள்களிலேயே வீட்டுச் சுவர்களில் விரிசல் விழுவதும் கதவு, ஜன்னல் ஆகியவை சேதாரம் ஆவதுமாக பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். அமைதியான சத்யாவுக்கு சண்டையிடுவதில் தட்டிக்கேட்பதில் பயம் இருப்பதால் தன் அம்மாவிடம் அவப்பெயரைப் பெறுகிறார். இதனால், மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுக்கும் சத்யாவின் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கிறது. அது என்ன? அந்த மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டதா? என்கிற மீதிக்கதையை ஃபேண்டசி பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.

மண்டேலா படத்தின் மூலம் ஒரு வாக்கு, தேர்தலில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை புரிதலோடு காட்சிப்படுத்திய அஷ்வின், மாவீரனிலும் சமூக பிரச்னையை கையில் எடுத்து வெற்றிகண்டுள்ளார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் இத்தனை அடியாட்களை ஹீரோ சண்டையிட்டு வெல்ல முடியாது என்கிற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு ஃபேண்டசியைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக கதையை நகர்த்திவிட்டார்.

குடிசை மாற்று வாரிய அமைச்சராக வரும் ஜெயக்கொடி(மிஷ்கின்) ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க தனக்கு வாக்களித்த மக்களை வைத்திருக்கும் இடமும் அமைச்சராகவே இருந்தாலும் தங்களுக்கு தீங்கு விளைவித்தால் அதைத் எதிர்த்து கேட்கும் மக்களையும் சரியாக திரைக்கதையில் இணைத்துள்ளார். 

குறிப்பாக, படத்தின் முதல் பாதியில் யோகிபாபு வரும் காட்சிகளில் பலத்த சிரிப்புச் சத்தம் கேட்கும் படியான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வடநாட்டு பணியாளராக யோகிபாபு அறிமுகமாகும் காட்சியில் இயக்குநரின் நகைச்சுவை உணர்வு சரியாக கடத்தப்பட்டிருக்கிறது. 

கார்டூனின்ஸ்டாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் தன் முந்தைய படங்களிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு கதையை மட்டுமே நம்பி களத்தில் குதித்ததால் தப்பித்திருக்கிறார். வடசென்னை மொழி, தோற்றம் அனைத்திலும் ஒரு ஸ்டார் நாயகனாக காட்டிக்கொள்ளாமல் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரமாக நடித்து, சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

யோகி பாபு, அதீதி ஷங்கர், மனிஷா, சுனில் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைத்துள்ளன. முக்கியமாக, ‘தப்புத்தாளங்கள்’ படத்திலேயே தான் மிகச்சிறந்த நடிகை என்பதை வெளிப்படுத்திய சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவிற்குள் நுழைந்து இனி தைரியமாக தன்னை நல்ல கதாபாத்திரங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு கச்சிதமான நடிப்பை மாவீரனில் வெளிப்படுத்தியுள்ளார். 

வில்லனான மிஷ்கின் கதாபாத்திரத்தை இயக்குநர் கொஞ்சம் மெறுகேற்றியிருக்கலாம். பல காட்சிகளில் ‘சவரக்கத்தி’ மிஷ்கினே நினைவுக்கு வருகிறார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விசயம் வசனங்கள். விஜய்சேதுபதி குரலில் அசரீரி போல் ஒலிக்கும் வசனங்கள் சோர்வை ஏற்படுத்தமால் சரியாக எழுதப்பட்டுள்ளன.

பெரும்பாலும் படத்தின் வெற்றியை இரண்டாம் பாதிகளே நிர்ணயிக்கும் என்பதால் முதல்பாதியில் கொடுத்த கவனத்தை இயக்குநர் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருக்கலாம். சில நல்ல காட்சிகள் திரைக்கதை தேக்கத்தால் வலுவை இழப்பது சிறிய பின்னடைவு.

பரத் சங்கரின் பின்னணி இசை, பிலோமின் ராஜ் எடிட்டிங், விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு என ஒவ்வொரு துறையின் உழைப்பும் தனித்தனியாக தெரிகிறது. 

மொத்தத்தில் இந்த முறை மாவீரனாக வென்றிருக்கிறாரா சிவகார்த்திகேயன்? என்கிற கேள்விக்கு கிளைமேக்ஸ் முடிந்ததும் வந்த கைதட்டல்களில் பதில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com