ரசிகர்களைக் கவர்ந்தாரா கிறிஸ்டோபர் நோலன்? ஓப்பன்ஹெய்மர் - திரை விமர்சனம்

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களைக் கவர்ந்தாரா கிறிஸ்டோபர் நோலன்? ஓப்பன்ஹெய்மர் - திரை விமர்சனம்

அமெரிக்காவில் பிறந்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர்(சிலியன் மர்ஃபி) இயற்பியலில் மேல் படிப்பிற்காக இங்கிலாந்து, ஜெர்மன் என ஐரோப்பா நாடுகளில் கல்விகற்கிறார். படிப்பில் தேர்ந்த மாணவனாக இருக்கும் ஓப்பன்ஹெய்மர் பின்னாள்களில் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார். அங்கு அவரின் திறமையைப் புரிந்துகொண்ட சிலர் அவரை ‘புராஜக்ட் மன்ஹாட்டன்’ என்கிற திட்டத்திற்குள் கொண்டுவருகின்றனர். 

அத்திட்டத்தின் விளைவைப்பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் தன்னை அரசே சார்த்திருக்கிறது என்கிற எண்ணத்துடனும் நாட்டிற்காகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமைப் பொறுப்பிற்குள் வருகிறார் ஓப்பன்ஹெய்மர். அது என்ன மன்ஹாட்டன் திட்டம்? மனிதகுல வரலாற்றில் மோசமான பேரழிவை நிகழ்த்திய ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை தயாரித்ததற்கான திட்டம்தான் அது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கிய ஒப்பன்ஹெய்மர் போருக்குப் பின் சந்தித்த பிரச்னைகளும் அகச்சிக்கல்களுமாக உருவாகியிருக்கிறது ‘ஓப்பன்ஹெய்மர்’.

ஒரு மேம்பட்ட விஞ்ஞானி அரசு அமைப்பிற்குள்ளும் அதன் அரசியல் விளையாட்டுகளுக்குள்ளும் சிக்கி இறுதியில் ஒன்றுமில்லாத ‘ஜீரோ’வாக மாறிய வரலாற்று உண்மைச் சம்பவத்தை நான் லீனியர் பாணியில் தனக்கே உரித்தான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். 

அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கு சொந்தமான பகுதியில் ’லாஸ் அலமாஸ்’ என்கிற ஒரு நகரத்தையே உருவாக்கி விஞ்ஞானிகளை அவர்களின் குடும்பத்தினருடன் அங்கேயே தங்கவைத்து 3 ஆண்டுகளில் 4,000 பேரின் உதவியுடன்  2 பில்லியன் டாலர்(இன்றைய மதிப்பில் ரூ.16,000 கோடி) செலவிட்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளை தயார் செய்யும் ஓப்பன்ஹெய்மர்  தாக்குதலுக்குப் பின் பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் தன்னை நிரூபிக்க போராடுவதை திரைக்கதையில் முன்பின்னாக நகர்த்தி சாதாரணக் கதையை தன்னால் முடிந்தவரை பெரிதாகக் காட்ட முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர்.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, ஒப்பன்ஹெய்மர்  சந்திக்கும் முதல் காட்சியில் ஐன்ஸ்டீன் ஒரு குளத்தின் அருகே நின்றபடி தலைக்கு மேல் கையை உயர்த்தி சிறிய கல் ஒன்றை தண்ணீருக்குள் எறிவார். அது மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். அவர் மீண்டும் அதேபோல்  செய்யும்போது ஓப்பன்ஹெய்மருடனான உரையாடல் காட்சி துவங்குகிறது. ஒரு சிறிய கல் நீரில் ஏற்படுத்திற அதிர்வைப் பார்க்கும் ஓப்பன்ஹெய்மருக்கு எதோ ஒரு புள்ளியில் இந்த அணுகுண்டு நிலத்தில் விழுந்தால் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்சிப்பூர்வமாகவே கிறிஸ்டோபர் நோலன் கடத்தியிருக்கிறார். 

ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியானதை ‘இப்போது நான்  உலகத்தை அழிக்கும் மரணமாகிவிட்டேன்’ என்கிற கீதையின் மேற்கோளுடன் தனிமனிதனாக ஓப்பன்ஹெய்மர் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படும்போதும் அன்றைய அமெரிக்க அதிபரான ஹார்ரி ட்ரூமேன் தன்னை பாராட்ட அழைத்தபோது அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டு, ‘மிஸ்டர் பிரெசிடெண்ட் என் கைகள் முழுக்க ரத்தக்கறை படிந்திருக்கிறது’ என தைரியமாக சொல்லும் காட்சிகளிலும் சிலியன் மார்ஃபி மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆஸ்கர் கிடைத்தாலும் வியப்பில்லை என்கிற அளவிற்கு காட்சிக்குக் காட்சி தன் நடிப்பாற்றலால் கதையுடன் ஒன்றியிருக்கிறார். 

மேலும், ராபர்ட் டௌனி மற்றும் ஃபுளோரன்ஸ் பக் ஆகியோரும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்ட காட்சிகள் இல்லையென்றாலும் அணுகுண்டை சோதனை செய்கிற காட்சி திரையில் பார்க்க ஒரு அனுபவமாகவே இருக்கிறது. உண்மையில், நோலனின் திரைக்கதையும் லுட்விக் குரோசனின் பின்னணி இசையுமே படத்தை தாங்கி நிற்கின்றன.

நோலனை நம்பிச்சென்றால் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு கதையில் அல்லது திரைக்கதையில் எதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என்கிற நம்பிக்கை உலகம் முழுக்க உள்ள அவரின் ரசிகர்களுக்கு உண்டு. அதனால், அவரின் ஒவ்வொரு படங்களுமே பெரிய எதிர்பார்ப்புகளுடனே வெளியாகின்றன. 

ஆனால், ’ஓப்பன்ஹெய்மர்’ ஒரு விஞ்ஞானியை பற்றி, அணுகுண்டு வீச்சைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதில் எந்த விதமான பிரம்மாண்டக் காட்சிகளும் இடம்பெறவில்லை. மேலும், இப்படம் எந்த விதமான திருப்பங்களுக்கும்  இடம் தராமல் வசனங்களை மட்டுமே நம்பி   3 மணி நேரத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே, படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கப்போகிறது. 

பரபரப்புகளை எதிர்பார்க்கும் ரசிகர்களை இப்படம் கண்டிப்பாக திருப்திப்படுத்தாது. சினிமாவை ரசிக்கக்கூடிய,  மனித மனத்தின் நுட்பங்களை திரையில் காணும் ஆர்வமுடையவர்களுக்காகவே ‘ஒப்பன்ஹெய்மர்’ உருவாகியிருக்கிறது. 

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒரு வரலாற்று உண்மைச் சம்பவத்தை, இத்தனை லட்சம் பேரை அழித்த ஒரு விஞ்ஞானியை பற்றி தெரிந்துகொள்ளச் சென்றால் நிச்சயம் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஏமாற்றாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com