சின்னத்திரை தொடரால் உயர்ந்த சினிமா நாயகிகள்!

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அதிக அளவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறியுள்ளனர். 
சின்னத்திரை தொடரால் உயர்ந்த சினிமா நாயகிகள்!

சின்னத்திரையில் நடித்து பின்னர் வெள்ளித்திரைக்கு  ஏராளமான நடிகர்கள் முன்னேறியுள்ளனர். நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அதிக அளவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறியுள்ளனர். 

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை தொடர்கள் முன்பை விட தற்போது அதிக அளவிலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குடும்பத் தலைவிகளையும் தாண்டி இளம் தலைமுறையினரையும் சின்னத்திரை தொடர்கள் கவர்ந்துள்ளன. 

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சின்னத்திரை தொடர்கள் குறித்த பல மீம்ஸ்களும், கிண்டல் பதிவுகளும் இளம் தலைமுறையினருடையதுதான் என்பதுதான் அதற்கு சாட்சி.

சினிமாவில் நடிப்பதால், திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர் வெள்ளித்திரை நடிகர்கள். ஆனால், தொடர்களில் நடிப்பதன் மூலம் நாள்தோறும் மக்களின் இல்லங்களுக்கே சென்று சேர முடிகிறது. மக்களை மகிழ்விக்க முடிகிறது. 

அப்படி மக்கள் மனங்களைக் கவர்ந்த பல நடிகர்கள் / நடிகைகளுக்கு  வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக மிளிர்கின்றனர். 

அவ்வாறு சின்னத்திரையில் நடித்து சினிமாவில் நாயகியாக உயர்ந்தவர்களின் பட்டியலைப் பார்ப்போம். 

ஹன்சிகா மோத்வானி: ஷக்கலக்க பூம் பூம் என்ற சின்னத்திரை தொடரில் குழந்தை பாத்திரத்தில் நடித்தவர் ஹன்சிகா. பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக மாறினார். தற்போதும் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் திருமண விடியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஸ்ரீவித்யா: தொலைக்காட்சித் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீவித்யா. அதனைத் தொடர்ந்து பல சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பின்னர் 2010 முதல் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். முதலில் தெலுங்கு படங்களில் அறிமுகமான ஸ்ரீவித்யா, வருத்தப்படாத வாலிபர்  சங்கம், வெள்ளைக்கார துரை, ஜீவா ஆகிய தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்றார்.

பிரியா பவானி ஷங்கர்: தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி ஷங்கர், சின்னத்திரை தொடர்களில் நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மக்கள் மனங்களை வென்ற அவர், மேயாத மானாக தற்போது வெள்ளித்திரையில் வலம் வருகிறார். மேயாத மான் திரைப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, குருதி ஆட்டம், ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியன் -2, பொம்மை ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.  

வாணி போஜன்: மாயா, தெய்வ மகள் ஆகிய தொடர்களில் வாணி போஜன் நடித்தார். குறிப்பாக தெய்வ மகள் தொடரில் சத்யா பாத்திரத்தில் பலரின் மனங்களை வென்றார். அதனைத் தொடர்ந்து பிரேமா, ஓ மை கடவுளே, மிரள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

மிருணாள் தாக்குர்: தொலைக்காட்சித் தொடரான இனிய இருமலர்கள் தொடரில் முதன்மை பாத்திரங்களில் ஒருவராக நடித்தவர் மிருணாள் தாக்குர். தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தார். ஹிந்தியில் சுரஜ்யா, லவ் சோனியா, டூஃபான், ஜெர்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

மெளனி ராய்: ஹிந்தி மொழியில் சின்னத்திரைத் தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த தொடர்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. தமிழில் நாகினி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். 

35 வயதாகும் மெளனி ராய், 2004 முதலே வெள்ளித்திரையில் அறிமுகமானார். லண்டன் கான்ஃபிடன்ஷியல், அக்‌ஷய் குமாருடன் கோல்ட், ரன்பிர் கபூருடன் பிரம்மஸ்திரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

சாக்‌ஷி தன்வர்: ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளைத் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து "கஹானி கர் கர் கி" மற்றும் "பேட் அச்சே லக்தே ஹெயின்" போன்ற, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த அவர், அமீர் கானுடன் தங்கல் திரைப்படத்தில் நடித்து உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com