ரசிகர்களைத் தூங்க விடாத குட் நைட்: திரைவிமர்சனம்

இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேசல் ரகுநாத், பகவதி என பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’.
ரசிகர்களைத் தூங்க விடாத குட் நைட்: திரைவிமர்சனம்

இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேசல், பகவதி என பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’.

குறட்டை என்பது பெரும்பாலும் அனைத்து குடும்பங்களிலும் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல். நமது அண்ணன், தங்கை, அப்பா, உறவுக்காரர்கள் என யாராவது ஒருவர் குறட்டைப் பழக்கத்தை உடையவராக இருப்பார். இந்த விமர்சனக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் கூட இந்தப் பழக்கம் இருக்கலாம். அப்படிப்பட்ட இந்தக் குறட்டையை வைத்து ஒரு திரைப்படம் இயக்கினால் எப்படி இருக்கும்? அதிலும் அதை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் வழங்கினால்...? இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக வந்திருக்கிறது ’குட் நைட்’. 

இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர்கள் மணிகண்டனும், மீதாவும் நடித்துள்ளனர். மிமிக்ரி, வசனகர்த்தா என தன்னை பன்முகக் கலைஞராக மாற்றிக் கொண்டுள்ள மணிகண்டனின் நடிப்பிற்கு தீனி போட்டுள்ள கதாபாத்திரம் மோட்டார் மோகன். தனது குறட்டைப் பழக்கத்தால் காதல் முதற்கொண்டு வாழ்வில் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களை இழக்கிறார் மணிகண்டன். வெகுளியான கதாபாத்திரமான மணிகண்டனுக்கு ஒருகட்டத்தில் நடிகர் மீதாவுடன் காதல் மலர்கிறது. யாரிடமும் அதிகம் பழகாத சுபாவம் கொண்டவராக வரும் மீதாவிற்கும் மணிகண்டனுக்கும் திருமணம் நடக்கிறது. 

இந்நிலையில் மணிகண்டனின் குறட்டைப் பழக்கத்தால் மீதா அவதிப்படுவதை அறியும் மணிகண்டன் அவரிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார். குறட்டைப் பழக்கத்தை எப்படியாவது நிறுத்தியாக வேண்டும் என முயற்சிக்கிறார். அவரின் முயற்சி பலித்ததா? அவர்கள் மீண்டும் சகஜமான வாழ்க்கைக்கு வந்தார்களா? இல்லையா? என்பதே திரைப்படத்தின் கதை. 

படம் தொடங்கி 10 நிமிடங்களுக்குள்ளாகவே ரசிகர்களை கைப்பற்றிவிட்டது ‘குட் நைட்’. குடும்பங்களில் நடக்கும் இயல்பான நடவடிக்கைகளில் தொடங்கி அதை நகைச்சுவையாக வழங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். வெகுளியான, கள்ளம் கபடமற்ற இளைஞனாக வரும் மணிகண்டன் காட்சிக்கு காட்சி கைத்தட்டல் வாங்குகிறார். அலுவலகம், குடும்பம், நண்பர்கள் வட்டம் என போகும் இடமெல்லாம் கிண்டலுக்குள்ளாக்கப்படும் இளைஞருக்குண்டான நடிப்பை யதார்த்தமாக அதேசமயம் தத்ரூபமாக வழங்கியிருக்கிறார் மணிகண்டன்.

தன்னால் தனது குறட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் இடங்களிலும், இயலாமையால் குமுறும் காட்சிகளிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் மனிதர். குறிப்பாக தனது மச்சான் ரமேஷ் திலக்குடன் மொட்டை மாடியில் வருந்தி அழும் காட்சிகளில் மணிகண்டன் எப்பேற்பட்ட நடிகன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார். அவருக்கு சற்றும் சளைக்காமல் அனைவரும் நடித்திருக்கின்றனர் என்பதுதான் ஆச்சர்யம். ரமேஷ் திலக் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாக வந்திருந்தாலும் இதில் முதிர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மணிகண்டனால் கிண்டல் செய்யப்படும் காட்சிகளில் தொடங்கி தனது மனைவிக்காக மருத்துவமனையில் உடைந்து அழும் வரை ரமேஷ் திலக்கின் நடிப்பு சிறப்பு. இப்படி ஒரு மச்சான் அமைந்தால் பரவாயில்லையே என நினைக்க வைத்து விடுகிறார் ரமேஷ்.

முதலும் நீ முடிவும் நீ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மீதா திரைப்படத்திற்கு ஏற்ற சரியான தேர்வு. அமைதியான பெண்ணாக வரும் அவர் தன்னால் யாருக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என எண்ணி குற்றவுணர்ச்சியால் வருந்தும் இடங்களில் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்களைத் தவிர பாலாஜி சக்திவேல், பகத், ரேசல் என அனைவரும் நம்பும்படியான இயல்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரமாக வரும் ஒரு நாய்க்குட்டிக்கும் இந்தப் பாராட்டைக் கொடுத்துவிடலாம். திரையில் பார்க்கும்போது இந்தப் பாராட்டின் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். படத்தில் வரும் சின்னச்சின்ன விஷயங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. குறிப்பாக யூ டர்ன் காட்சிகள். “பரவால்ல..ப்யூரிபயர் மாட்டப் போற இடத்தை எல்லாம் பேமலி ஆக்கிடுற”, “என்னத்தவிர இந்த வாழ்க்கையில எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க”, மொட்டை மாடி வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

பொதுவாக யதார்த்தமான சினிமாக்களுக்கு மலையாளம் சினிமாவை கைகாட்டி சொல்லும் தனி ரசிகர்களின் வாயடைக்கும் படமாக குட் நைட் இருக்கும். பின்னணி சான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிக்கு வலுசேர்க்கிறது. கேமரா மற்றும் படத்தொகுப்பு பணிகள் சிறப்பு. காலி நான் காலி பாடல் முணுமுணுக்கும் ரகம். 

கமர்சியல் சினிமாக்களுக்கு மத்தியில் மக்களிடமிருந்து வரும் கதைகளை திரைப்படமாக்கியது மட்டுமல்லாமல் அதையும் நல்ல ரசிக்கும்படியான திரைக்கதையாகக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். 

சாதாராண ஒரு விஷயமாகப் பார்க்கப்படும் குறட்டையை வெறுக்காமல் ரசிக்கச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிருந்தால் குட் நைட் உங்களை ஏமாற்றாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com