நாடு விட்டு நாடு...டன்கி படம் பேசும் உண்மைக் கதை!

சட்டத்திற்கு புறம்பாக மேற்குலக நாடுகளுக்கு அனுப்பப்படும் இந்தியர்களின் பயணத்தைக் குறிப்பிடும் வார்த்தை டன்கி.
நாடு விட்டு நாடு...டன்கி படம் பேசும் உண்மைக் கதை!

ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு டாங்கி பிளைட் முறையில் சென்ற ஒருவரின் கதையைத் தழுவி உருவாகியுள்ள படத்தில் ஷாருக்கான், டாப்ஸி இன்னும் சிலர் லண்டன் செல்ல விரும்புவதாக டீசரில் காட்டப்படுகிறது. 

கழுதைப் பயணம் (டான்கி பிளைட்) என்று சொல்லப்படுகிற இந்த முறை மேற்குலக நாடுகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக அனுப்பப்படும்  இந்தியர்களின் பயணத்தைக் குறிக்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கழுதைப் பயணம் என்பது என்ன?

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர்களை அனுப்பும் முறை இது.

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் சில பகுதிகளில் முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளில் ஒன்றான இதன் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் இந்தியவர்கள் திரும்பி வர இயலாமல் அங்கேயே சிக்கிக் கொண்ட கதைகளும் உண்டு.

எப்படி அனுப்பப்படுவர்?

முறையான பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், வெளிநாட்டுக்குச் செல்வதன் மூலமாக தங்களின் வறுமையைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்யும் இளைஞர்களை மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாகச் சொல்லி இதற்கென பெரும்தொகையை அங்கீகாரமற்ற முகவர்கள் பெற்று கொள்வார்கள்.

ஷெங்கன் மண்டலம் எனச் சொல்லப்படுகிற ஐரோப்பாவின் நாடுகள் ஏதாவது ஒன்றிற்கு இங்கிருந்து அவர்கள் அனுப்பப்படுவர்.

இந்த ஷெங்கன் பகுதியில் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும் உறுப்பினரல்லாத நாடுகளும் அடக்கம். இந்த நாடுகளுள் தடையின்றி பயணிக்க முடியும்.

இதனை பயன்படுத்தி ஜெர்மன், பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் அங்கிருந்து தொடர்புடைய முகவர்கள் வழியாக தனி விசா தேவைப்படும் நாட்டுக்கு, அனுமதியின்றி லாரிகள், கார்கள், பஸ்களில் சில இடங்களில் நடந்தும் எல்லையைக் கடந்து போலி கடவுச்சீட்டுகளோடு அனுப்பப்படுவர்.

இப்படி செல்பவர்களில் பலர் முறையான விசா இல்லாததால் பிடிபட்டு மீண்டும் திரும்ப முடியாத நிலையில், அந்த நாடுகளில் சிக்கிக் கொண்டு சிறைகளில் கழிப்பதும் பதிவாகியுள்ளன.

பிரபலமான இந்த டான்கி ப்ளைட் முறையைக் கையில் எடுத்து, புகழ்பெற்ற இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி படத்தை உருவாக்கியுள்ளார்.

ஷாருக்கானின் சமீபத்திய படங்களின் வசூல் 1000 கோடி ரூபாயைத் தாண்டி வருவதால் இந்தப் படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டன்கி படம் கிறிஸ்துமஸ் நாளையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com