தன்பாலின உணர்வுகளைப் பேசும் ‘காதல் தி கோர்' - திரை விமர்சனம்

நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவான ‘காதல் தி கோர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தன்பாலின உணர்வுகளைப் பேசும் ‘காதல் தி கோர்' - திரை விமர்சனம்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற மாத்யூஸ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக, மாத்யூஸ் பல ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிடுகிறார். இதை அறிந்த ஊர் மக்கள், மாத்யூஸையும் தங்கனையும் பல வகைகளில் கேலி செய்கின்றனர். 

தன்பாலின ஈர்ப்பாளரான மாத்யூஸ் ஒரு கணவனாக, மனைவி மீது அன்பு வைத்திருந்தாலும் அவரின் உடல் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையை நினைத்து வருந்துகிறார். தொடர்ந்து, தன் பாலின விருப்ப உணர்வால் தனக்கு சமூகத்தில் நிகழும் அவமரியாதைகளைக் குறித்த கவலைகளில் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என அவர் சார்ந்திருக்கும் இடதுசாரி கட்சியினரிடம் தெரிவிக்கிறார். பாலினத் தேர்வு அவரவரின் தனிப்பட்ட விசயங்கள் என விளக்கும் கட்சி நிர்வாகி, உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுடன் தன்பாலின வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி புதிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் எனக் கூறி மாத்யூஸை போட்டியிட சம்மதிக்க வைக்கின்றனர். 

மறுபுறம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அங்கு, திருமணம் நடந்த 20 ஆண்டுகளாக தன் கணவருடன் இணைந்து வாழ்ந்து வரும் தனக்கு சாதாரணமாக ஒரு பெண்ணுக்குக் கிடைக்கக்கூடிய உடல் ரீதியான தேவைகள் அமையாதது, தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத ஆணுடன் இணைந்திருப்பது என சில நெருக்கடிகள் இருந்தாலும் என்றாவது இவை மாறும் என்கிற நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்ததாக் கூறுகிறார் ஓமணா.

ஆனால், மாத்யூஸுக்கு ஓமணாவுடன் வாழவே விருப்பம் என்பதால் தன் தரப்பு வழக்கறிஞரை வைத்து வாதிடும் மாத்யூஸ் தங்கனுடனான உறவு குறித்து பேசத் தயங்குகிறார். அவர்கள் இருவருக்கும் உறவு இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வழக்கு முடிவை நோக்கி நகரம்போது மாத்யூஸுக்கு எதிராக அவரின் தந்தையே நீதிபதியிடம், என் மகன் தன்பாலின ஈர்ப்பாளன்தான் என சாட்சியளிக்கிறார். இதனால் மனம் உடைகிற மாத்யூஸ் இந்த உணர்ச்சி நெருக்கடிகளிலிருந்து மீண்டாரா? விவாகரத்து வழக்கு என்ன ஆனது? தன்பாலின ஈர்ப்பாளராக அடையாளமான பின் மாத்யூஸ்க்கு மக்கள் தேர்தலில் வாக்களித்தனரா? என்கிற கேள்விகளை முன்வைத்து காதல் தி கோர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜியோ பேபி.

தன் முதல் படமான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறிய ஜியோ பேபி, இப்படத்தில் அன்பு என்பது நம்முடம் இருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் இருக்கிறது என்பதை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். தன்பாலின ஈர்ப்புடையவர்கள் இன்று வெளிப்படையாகத் தங்கள் பாலினத் தேர்வை அறிவிக்கும் நிலையில் இருந்தாலும் பொது சமூகத்தினரிடையே அவர்கள் எப்படி கவனிக்கப்படுகிறார்கள் என்கிற எதார்த்தைக் காட்டியதுடன் சமூகத்தினரின் பிற்போக்குத் தனங்களையே குறை கூறாமல் தன் நேர்த்தியான சிந்தனையில் ஒரு உரையாடலாகவே படத்தை இயக்கியிருக்கிறார். 

தன்பாலின உணர்வாளர்களுக்கு எதிரானவர்கள் நம்முடன் இருப்பவர்களே, மதமும்  அரசியலும் அதற்குப் பின்புதான் என்பதை காட்சிகளின் வழியே பல இடங்களில் உணர முடிகிறது.  முக்கியமாக, படத்தின் கிளைமேக்ஸை பாராட்டியாக வேண்டும். உண்மையில், காதல் என நினைத்து வைத்திருப்பது எல்லாம் என்னவென்று ஒருகணம் யோசிக்க வைத்திருக்கிறார். ஒரு ஆணின் தன்பாலின உணர்வை மனைவி, மகள், வழக்கறிஞர் என மூன்று பெண்கள் புரிந்துகொள்ளும் அழகை கவிதையைப்போல் உருவாக்கியிருப்பதே இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது ஆச்சரியம். இன்றைய வசூல் போட்டிகளில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் யாராவது தன்பாலின ஈர்ப்பாளராக நடிப்பார்களா?

சமூகத்தில் நிழவும் இந்த பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்ததால்தான் மம்மூட்டி இக்கதையை தயாரித்து நடித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. குறிப்பாக, கட்டாயத்தில் திருமணம் செய்து ஒரு பெண்ணை 20 ஆண்டுகளாக வதைத்து விட்டோமே என்பதை நினைத்து ‘தெய்வமே’ எனக் கதறி அழும் காட்சிபோதும் மம்மூட்டியின் நடிப்புத் திறனைச் சொல்ல!

படம் முழுவதும் மனதில் பாரத்தை சுமக்கும் நாயகியாக வரும் ஜோதிகாவின் நடிப்பும் கதைக்கு ஒன்றியிருக்கிறது. தன் கணவனுக்குத் துணையாக நிற்கும் மனைவியாக, அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரிந்து செல்லும் பெண்ணாக ஜோதிகா சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விமர்சகர்களால் நினைகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்!

ஜியோ பேபி போன்ற மனித உணர்வுகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு உறுதியாக இருப்பவர்கள் கதை, திரைக்கதையாசிரியர்களே. இப்படத்தில் அந்த உணர்ச்சிகள் நம்மை நெகிழ்ச்சியடையும் அளவிற்கு கொண்டு சென்றதுக்குக் காரணம் படத்தின் கதாசிரியர்களான ஆதர்ஷ் சுகுமாரனும் பால்சன் ஸ்காரியாவும்தான் என்றே தோன்றுகிறது. எழுத்தாளர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்படும் நுண்மையான உணர்வுகள் பேசப்பட்டிருகின்றன. மலையாள சினிமா, மலையாள இலக்கியத்தைச் தாண்டி சென்றதாகக் கூறப்படுவதுண்டு. அக்கருத்தைக் ’காதல் தி கோர்’ உறுதிப்படுத்தியிருக்கிறது என எண்ண வைத்திருக்கிறது படக்குழு. 

தங்கனாக நடித்த ஜிஷு சென்குப்தாவின் கள்ளமற்ற நடிப்பு, ஷாலு கே.தாமஸ் ஒளிப்பதிவு, மாத்யூஸ் புலிக்கனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் அனுபவத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. 

பாராட்டுக்களும் விமர்சனங்களும் வரக்கூடிய ஒரு கதைக்கருவில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர், படத்தில் இடம்பெற்ற தேவையற்ற சில கதாபாத்திரங்களைத் தவிர்த்திருக்கலாம். 

தன் மாமன் தன்பாலின ஈர்ப்பாளார் என்பதால் கிண்டலுக்கு ஆளாகி மனமுடையும் சிறுவனை அணைத்து வேதனைப்படும் தங்கன்,  ‘மனிதர்களுக்கு பிரிந்து செல்வதில்தான் பயம்’ என்பதும் ஓமணா, ‘என் வாழ்க்கைக்காக நான் பிரியவில்லை. உங்கள் வாழ்க்கைக்காகவும்தான்’ என மாத்யூஸிடம் சொல்வதில் இருக்கும் அன்பும் காதலும் உருவாக்கும் நெகிழ்வால்  ‘காதல் தி கோர்’ மிகச்சிறந்த படம் என்றே தோன்றுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com