
தமிழ் மற்றும் ஹிந்தித் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை 1996 ஆம் ஆண்டு மணம்புரிந்த பின் பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
பின், கடந்த 2018 ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் துபை சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, அவரின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியதால் தயாரிப்பாளர் போனி கபூர், துபை காவல்துறையினரால் விசாரணைக்கு ஆளானார்.
ஆனால், ஸ்ரீதேவியின் மரணம் ஒரு விபத்துதான் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதால் அவரின் உடல் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: நாளை(அக்.4) துவங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு?
இந்நிலையில், ஸ்ரீதேவி மறைந்து 6 ஆண்டுகளை நெருங்கும் நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “ஸ்ரீதேவி அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டார். குறிப்பாக, எங்கள் திருமணத்திற்க்கு முன்பிலிருந்தே உணவில் உப்பை சேர்க்காமல் உப்பில்லா உணவுகளை மட்டுமே உட்கொண்டதால் குறைந்த ரத்தம் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக, அடிக்கடி ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்படும். எங்கள் திருமணத்திற்குப் பின் பலமுறை அவருக்கு இப்படி நடந்திருக்கிறது. நாங்கள், குழந்தைகளுடன் வெளியே இரவு உணவைச் சாப்பிட சென்றாலும் கறாராக உப்பில்லாத உணவையே ஸ்ரீதேவி உண்பார். துபையில் அவர் விழிப்புநிலையை இழந்ததால்தான் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்தார். துபை காவல்துறை என்னை பல கோணங்களிலும் விசாரித்தனர். உண்மையைக் கண்டறியும் சோதனையையும் செய்தார்கள். மருத்துவர்கள் இது விபத்துதான் எனக் கூறும்வரை நான் விசாரணை வளையத்தில்தான் இருந்தேன். ஸ்ரீக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் நாகார்ஜூனா, தன்னுடன் ஸ்ரீதேவி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால், ஸ்ரீதேவியின் பல் ஒன்று உடைந்தது எனத் தன் நினைவைக் கூறினார். குறைந்த ரத்த அழுத்தத்தால் அப்போதிலிருந்தே இப்பிரச்னை இருந்திருக்கிறது.” என முதல்முறையாக ஸ்ரீதேவி மரணம் குறித்து போனி கபூர் பேசியுள்ளார்.
போனி கபூர் - ஸ்ரீதேவி இணைக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.