தனியே வென்றாரா த்ரிஷா? தி ரோடு: திரை விமர்சனம்

நடிகை த்ரிஷா நடிப்பில் க்ரைம் த்ரில்லராக இந்த வாரப் போட்டியில் களமிறங்கியிருக்கிறது “தி ரோட்”. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியிருக்கிறார்.
தனியே வென்றாரா த்ரிஷா? தி ரோடு: திரை விமர்சனம்
தனியே வென்றாரா த்ரிஷா? தி ரோடு: திரை விமர்சனம்

நடிகை த்ரிஷா நடிப்பில் க்ரைம் த்ரில்லராக இந்த வாரப் போட்டியில் களமிறங்கியிருக்கிறது “தி ரோடு”. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியிருக்கிறார். நடிகை த்ரிஷாவுடன் நடிகர்கள் மியா ஜார்ஜ், சார்பட்டா பரம்பரை சபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வினோத் சாகர் என பலர் நடித்திருக்கின்றனர். 

தனது குடும்பத்தினரை உயிராக நேசிக்கும் த்ரிஷா அவர்களை ஒரு சாலை விபத்தில் இழக்கிறார். அதனால் துவண்டு மன உளைச்சலில் தத்தளிக்கும் அவர் தனது கணவனும், மகனும் மரணித்த சாலைக்கு செல்ல அங்கு அதற்கு முன்பே பலரும் இவ்வாறு மரணித்திருப்பதை அறிந்து கொள்கிறார். குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையில் எப்படி தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன என்பதை தேடி அலையும் அவருக்கு பல அதிர்ச்சிகர உண்மைகள் தெரிய வருகின்றன. அதன்மூலம் தனது குடும்பத்தின் இறப்புக்கு காரணமானவர்களைத் தேடத் தொடங்குகிறார். அந்தத் தேடல் என்ன ஆனது என்பதை முழுநீளத் திரைப்படமாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர். 

சமீப காலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்கள் பரவலாக வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கெனவே பரமபதம், ராங்கி, நாயகி என தனது கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து நடித்த நடிகை த்ரிஷாவுக்கு அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது தி ரோடு. அன்றும் இன்றும் என்றும் போல் நடிகை த்ரிஷா திரையில் ஜொலிக்கிறார். ஆனால் தடுமாறும் லாஜிக்குகளால் அவரது நடிப்பு செல்லுபடியாகவில்லை. ஒரே நேரத்தில் இரு கதைகளாக விரியும் திரைக்கதையால் படத்தின் மீதான ஆர்வம் கலைந்து விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

திரைப்படத்தின் கதாபாத்திரங்களை நிறுவ, அளவுக்கு மீறிய காட்சிகளை திணித்தது படத்தின் வேகத்தைக் குறைக்கச் செய்திருக்கிறது. த்ரிஷாவுக்கு இணையாக சபீரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இடங்கள் பொறுமையை சோதிக்கின்றன. தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரே கணத்தில் சபீருக்குள் ஏற்படும் மாற்றம் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்படவில்லை. காவலராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் த்ரிஷாவுக்கு உதவினாலும் இரண்டு முறை கொலை சம்பவத்தை எதிர்கொண்ட பிறகும் எதற்காக காவல்துறை என்ற ஒன்றை இவர்கள் அணுகாமல் இருக்கின்றனர்? ஏன் இறுதிவரை தனியே த்ரிஷா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் எனும் கேள்விகள் எழாமல் இல்லை.

சாலையோரத்தில் நடக்கும் திருட்டு சம்பவத்தை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் அதற்கு ஒரு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது திரைப்படத்தை எங்கோ தொடங்கி எங்கோ முடித்த உணர்வை ஏற்படுத்துகின்றது. தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்திருந்திருக்கலாம். பின்னணி இசையை இன்னும் தேவை அறிந்து பயன்படுத்தியிருக்கலாம். 

துணை நடிகர்களின் நடிப்பு படத்தில் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக நடிகர்கள் வேல ராமமூர்த்தி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர். தனது மகனுக்காக கடன்வாங்கி ஊர் முன்பாக கூனிக்குறுகி நிற்கும் இடங்களில் வேல ராமமூர்த்தி நிஜ மக்களின் வேதனையைக் கொண்டு வந்திருக்கிறார்.

காவலராக பல இடங்களில் எம்.எஸ்.பாஸ்கரை நாம் பார்த்திருந்தாலும் உயரதிகாரியிடம் தப்பித்து உண்மையைத் தேட உதவுவதில் அவரது நடிப்பு பாராட்டத்தக்கது. இவர்களைத் தவிர மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப் ஆகியோருக்கு நடிப்பதற்கான பெரிய இடங்கள் இல்லை. சபீரின் நடிப்பிலும் கூட ஒரு கட்டத்தில் கிங் ஆப் கோதா திரைப்படத்தின் சாயலை உணர முடிந்தது. 

பணம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், சமூகம் அதற்கு தரும் மதிப்பு என இயக்குநர் பேசிய சில முக்கியமான விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. 

சாலை விபத்துகளில் நடக்கும் கொள்ளைகளின் பின்னணியாக தி ரோடு பேசியவற்றை மக்கள் ஏற்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com