பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரைக் ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதமாக வெளியான ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் பரிந்துரைக்கப்படும் 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக் செல்ல வேண்டும். அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சமைக்க வேண்டும்.
இதற்கிடையே முதல் வாரத்தில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் மற்றும் ஸ்மால் வீட்டில் போட்டியாளர்களுக்கு ‘ஆக்ஸிஜன் எமர்ஜென்ஸி’ என்ற டாஸ்க் இன்று வழங்கப்பட்டது. எந்த வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அதிக சிலிண்டர்களை கைப்பற்றி வைத்துள்ளார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சிலிண்டரை கைப்பற்றுவதற்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதத்தில் முதல் ப்ரோமோ அமைந்திருந்தது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக ஸ்மால் பாஸ் வீட்டின் கண்ணாடி உடைந்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இரண்டாவது ப்ரோமோவில், மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், விஜய்க்கும் விஷ்ணுவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே முதல் வாரத்தில் பிரதீப்பை அச்சுறுத்தும் விதமாக பேசியதால் விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மூன்று முறை எச்சரிக்கை அட்டை வாங்கினால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
எனவே, இந்த முறை விஷ்ணு மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் எச்சரிக்கை அட்டை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.