திரைப்படமாகிறது வாச்சாத்தி சம்பவம்

199ல் தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை மையப்படுத்தி திரைப்படம் உருவாக உள்ளது. 
திரைப்படமாகிறது வாச்சாத்தி சம்பவம்

199ல் தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை மையப்படுத்தி திரைப்படம் உருவாக உள்ளது. 

இந்த படத்தை நடிகையும் இயக்குநருமான ரோகிணி இயக்கவிருக்கிறார். இதில் ஜெய்பீம் புகழ் லிஜோமோல் ஜோஸ் நடிக்க ஒப்பதமாகியுள்ளார். எடுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-இல் வனத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறைகளின் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, வாச்சாத்தி கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அந்த அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அக்கிராமத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு 1995-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ, இந்திய வனப் பணியைச் சோ்ந்த 4 அதிகாரிகள் உள்பட 155 வனத் துறையினா், 108 காவல் துறையினா், 6 வருவாய்த் துறையினா் என 269 போ் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 1996-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, இறுதியாக தருமபுரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட 54 போ் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேரில், 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், மீதமுள்ளவா்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-இல் தீா்ப்பளித்தது.

குறிப்பாக, இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோா் முக்கியக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து தண்டனை பெற்றவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மேல்முறையீடு வழக்குகளைத் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்து செப். 30-இல் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதில் 50 சதவீத தொகையை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவா்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். அதேபோல, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், வாச்சாத்தி கிராமத்துக்குத் தேவையான நலத் திட்ட உதவிகளை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டாா். 

சம்பவம் நடந்த காலத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட வன அதிகாரியாக இருந்தவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com