இயக்குநராக வென்றாரா மனோஜ் பாரதிராஜா? மார்கழி திங்கள் திரைவிமர்சனம்

இயக்குநராக வென்றாரா மனோஜ் பாரதிராஜா? மார்கழி திங்கள் திரைவிமர்சனம்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் மார்கழித் திங்கள்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் மார்கழி திங்கள். தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும் அதற்குப் பிறகு பெரிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் எதுவும் அவரைக் காண முடியவில்லை. எனினும் நீண்ட நாள்களுக்குப் பிறகு இயக்குநராக முயன்றிருக்கும் மனோஜ் பாரதிராஜாவின் மார்கழி திங்கள் காதலுடன் சேர்த்து முக்கியமான சிக்கலையும் பேச முயன்றிருக்கிறது. 

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தின் பள்ளியில் ஒன்றாக படிக்கின்றனர் கவிதாவும், வினோத்தும். இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட அது கவிதாவின் தாத்தா பாரதிராஜாவுக்குத் தெரியவருகிறது. கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையில் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவும், பேசிக் கொள்ளவும் கூடாது எனத் தெரிவிக்கும் பாரதிராஜா, அதற்குப் பிறகு காதல் குறித்து முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கிறார். அதன்படியே இருவரும் தனித்தனியே தங்களது படிப்பைத் தொடர்கின்றனர். அதற்கிடையில் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் என்ன? அவர்களது காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே மார்கழி திங்கள் திரைப்படத்தின் கதை. 

பள்ளிக்கால காதல் கதைக்குள் ஆணவப் படுகொலையை பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா. நாயகனாக வரும் ஷ்யாம் செல்வன் தட்டுத் தடுமாறி நடித்திருக்கிறார். பல இடங்களில் செயற்கைத் தனமாக அவரது நடிப்பு இருப்பதால் காட்சிகள் தொய்வாக அமைந்து விடுகின்றன. நாயகியான ரக்‌ஷனா சற்று நேர்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

முதல்பாதி முழுக்க காதல் காட்சிகள்தான் என்பதால் அதற்கேற்றார்போல் திரையில் அழகாக நடிப்பைக் கடத்தியிருக்கிறார் ரக்‌ஷனா. இவர்களைத் தவிர கதாநாயகியின் மாமாவாக வரும் சுசீந்திரன் மிடுக்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். திண்டுக்கல்காரராக பொருந்திப் போயிருக்கிறார். சமீப காலங்களில் பல திரைப்படங்களில் நடித்ததாலேயோ என்னவோ பாரதிராஜா நடிப்பின் மீது பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. முந்தைய திரைப்படங்களில் வரும் அதே முகபாவனைகள் அவர் கதாபாத்திரத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. 

படம் இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான நேரமே இருப்பதால் கூடுமானவரை விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கலாம். முதல்பாதி முழுக்க காதல், மெதுவாக நகரும் காட்சிகள், விறுவிறுப்பற்ற திரைக்கதை என படம் தேங்கி நிற்கிறது. ஆணவப்படுகொலை குறித்து பேசுவதாக இருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு இந்தப் படம் கொடுக்கும் விடை சரிதானா எனும் கேள்வி எழுகிறது. அது விவாதத்திற்குரியது என்றாலும் அவற்றையும் ஆழமாக எழுதியிருக்கலாம். 

படம் காதல் திரைப்படம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுவது இளையராஜாவின் இசைதான். காதல் காட்சிகளில் அவரது இசை வென்றிருக்கிறது. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. 

காதல் காட்சிகளால் கரையேற நினைத்த மார்கழித் திங்கள் விறுவிறுப்பற்ற திரைக்கதையால் மந்தமாகக் கழிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com