ரசிகர்களைக் கவருமா குஷி? திரைவிமர்சனம்

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளிவந்திருக்கிறது குஷி. 
குஷியாக சமந்தா - விஜய் தேவரகொண்டா!
குஷியாக சமந்தா - விஜய் தேவரகொண்டா!
Published on
Updated on
2 min read

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளிவந்திருக்கிறது குஷி. 

நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் குஷி.

அதே பெயரில் இயக்குநர் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது இத்திரைப்படம். அதிகமான பெண் ரசிகர்களைக் கொண்ட விஜய் தேவரகொண்டாவிற்கு இத்திரைப்படம் கைகொடுக்குமா, இல்லையா? 

நாத்திகராக இருக்கும் தந்தைக்கு மகனான விஜய் தேவரகொண்டாவும், ஆத்திகராக இருக்கும் தந்தைக்கு மகளாக இருக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் வருகிறது.

அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் இடையேயான வாதத்தால் மோதலில் இருக்கும் இவ்விரு பெற்றோர்களின் ஒப்புதலின்றி காதல் திருமணம் செய்து கொள்கின்றனர் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும். திருமணம் செய்துகொண்டாலும் இவ்விருவருக்கும் இடையே பிரச்னை, சிக்கல் வரும் எனத் தெரிவிக்கும் சமந்தாவின் ஆத்திகத் தந்தை அதற்கு பரிகாரமாக விசேஷ யாகத்தை விஜய்யும், அவரது தந்தையும் இணைந்து செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். அவர் சொன்னதுபோல் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை பூதாகரமாகிறது. பிரச்னையை கடக்க யாகம் நடந்ததா இல்லையா? இருவரும் தங்களது பிரச்னையைத் தீர்த்துக்கொண்டு இணைந்து வாழ்ந்தார்களா, இல்லையா என்பதே குஷி திரைப்படத்தின் கதை.

வழக்கமான காதல் கதைதான். நடிகர் விஜய் தேவரகொண்டா எப்போதும்போல தனக்கு பாதுகாப்பான காதல் கதையையே தேர்ந்தெடுத்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் முந்தைய திரைப்படங்களிலிருந்து அவரது நடிப்பில் எந்த வேறுபாட்டையும் இதில் பார்க்க முடியவில்லை. படத்திற்கு நல்ல பலம் நடிகை சமந்தாவின் நடிப்பு. சமீப காலமாக அவர் தமிழில் தோன்றவில்லை என்றாலும் ஒரு டப்பிங் படத்திலாவது வந்திருக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஆறுதல். கடவுள் நம்பிக்கை கொண்ட பெண்ணாக கணவனுக்கும், தந்தைக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.

காதல் கதைக்குள் ஆத்திகம், நாத்திகம் எனும் கருத்தை வைத்து திரைக்கதையை அமைத்தது படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதேபோல் நடிகை ரோஹிணி மற்றும் ஜெயராம் இடையேயான காதல் காட்சிகள் அழகாக இருக்கின்றன. திருமண வாழ்க்கைக்கு குழந்தை அவசியமா அல்லது காதல் அவசியமா என பேசும் காட்சிகள் வழக்கமானதாக இருந்தாலும் படத்திற்கு கைகொடுக்கும் இடங்களாக அவையே உள்ளன. ”உண்மையை நம்பிக்கை மறைக்க அனுமதிக்கக் கூடாது”, ”ஆத்திகம், நாத்திகம்னு சண்டை போடுற நாம அடிப்படையில மனுஷங்க அப்படிங்கறத மறந்திடுறோம்” மாதிரியான வசனங்கள் கதையின் சாரத்தை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. 

முன்பே தெரிவித்ததைப் போல காதல் கதை என்றாலும் கதைக்குள் பார்வையாளர்களைக் கொண்டு வர காஷ்மீர் வரை படக்குழு சென்றிருக்க வேண்டாம். கதைக்குள் வருவதற்கே வழி தெரியாமல் பார்வையாளர்களை காஷ்மீருக்குள் சுற்ற விட்டிருக்கிறார் இயக்குநர். படத்தில் அழகாக இருந்தது கடவுள் நம்பிக்கையில்லாத நாயகன், கடவுளை நம்பும் நாயகி, கடவுளை நம்பினாலும் காதலுடன் பயணிக்கும் கிறிஸ்துவர்களான ரோஹிணி, ஜெயராம். ஆனால் இஸ்லாமியர்களை மட்டும் இப்படி தனியே இயக்குநர் நிறுத்தியிருப்பது ஏன்? காஷ்மீர் என்றவுடன் அங்குள்ள மக்கள் அச்சுறுத்தல் நிறைந்தவர்கள் மாதிரியாக முதல்பாதியில் வரும் காட்சிகள், அந்த பைக் சேசிங் சண்டை எதற்கு? அங்கு சண்டைக்காட்சி வருவதற்கு என்ன காரணம்? எனப் புரியவில்லை. விஜய்யுடன் வரும் துணை கதாபாத்திரம் அவ்வப்போது ஜெய் ராம் என சொல்கிறார். நாயகனோ பாரத் மாதா கி ஜே என துப்பாக்கிச் சண்டையின் நடுவே கத்துகிறார்.

அதேபோல் துணை கதாபாத்திரங்களுக்கான வடிவமைப்பும் இயக்குநரின் கற்பனையில் உருவானதாக இருக்கிறதே தவிர நிஜத்தை பிரதிபலிப்பதாக இல்லை. பெண்களை மதிப்பவன் நான் எனப் பேசும் நாயகன் திடீரென “இந்த பொண்டாட்டிகளே இப்படித்தான்” என மதுபோதையில் நடனமாடுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான பல இடங்கள் படத்தில் இருக்கின்றன. விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் இத்தனை விஷயங்களை எதிர்பார்க்கலாமா எனக் கேட்டாலும் போகிற போக்கில் இவ்விஷயங்களை கடந்து போய்விடவும் முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது. டப்பிங் படங்களில் நாயகனைத் தமிழ் பையனாகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என அவசர சட்டம் போட்டால் தகும். அந்தளவு அந்நியமாக இருக்கிறது திரைக்காட்சிகளில் வரும் தமிழ் நிலம். 

முதல் பாதியில் காஷ்மீரை சுற்றிக்காட்ட மெனக்கெட்ட இயக்குநர், இரண்டாம் பாதியில் பார்வையாளர்களுக்கு வழக்கமான லாலிபாப்பைக் கொடுத்திருக்கிறார், ரசிகர்கள் எப்படி ருசிக்கப் போகிறார்களோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com