தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷா ருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜவான் எப்படியிருக்கிறது? 
தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்
தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷா ருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது ஜவான். 

ஷாருக் கான் தமிழ் இயக்குநருடன் கைகோர்த்திருக்கும் செய்தி வெளியானதிலிருந்தே ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலரும் இணைந்தது திரைப்படத்தின் மீதான ஆவலை அதிகப்படுத்தியது. எப்படி வந்திருக்கிறார் ஜவான்? 

தன் மீது ஊழல் புகார் தெரிவித்த ராணுவ வீரர் விக்ரம் ரத்தோரை (ஷாருக் கான்) ராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் காளி (விஜய் சேதுபதி) கொலை செய்கிறார்.

மேலும் விக்ரம் ரத்தோரின் மனைவி தீபிகா படுகோன் மீது தேச துரோக குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். தீபிகாவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட, அவரது மகன் ஆசாத் (ஷாருக் கான்) பின்னாளில் சிறைத்துறை உயரதிகாரியாகிறார். 

சிறையில் தண்டனை பெற்ற பெண்களின் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்காக கடத்தலில் ஈடுபடுகிறார் ஆசாத். அதன் மூலம் அரசை மிரட்டி தனது காரியங்களை சாதிக்கிறார்.

இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் மோதல் வருகிறது. அந்த மோதலின் முடிவு என்ன ஆனது? தனது பெற்றோர்களைக் கொன்ற விஜய் சேதுபதியை பழிவாங்கினாரா ஷாருக்கான்? என்பதே ஜவான் திரைப்படத்தின் கதை. 

நல்ல பிளாஷ்பேக் காட்சியுடன் தொடங்கும் திரைப்படம் அதே வேகத்தில் போய் முட்டி நிற்கிறது. சிறைத் துறை அதிகாரியாக சிறைக் கைதிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மெட்ரோ ரயிலைக் கடத்துவது, மத்திய அமைச்சரைக் கடத்துவது என தொடர் கடத்தலில் ஈடுபடுகிறார் ஷாருக் கான். அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவலர் நயன்தாரா.

இயக்குநர் அட்லீயின் கதை உருவாக்கம் குறித்து பல விமர்சனங்கள் ஏற்கெனவே உள்ளன. அதற்கு மீண்டும் இப்போது வலுச் சேர்த்திருக்கிறார் அட்லீ. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் விரியும்போது அக்காட்சியை முன்பே ஏதோவொரு திரைப்படத்தில் பார்த்த நினைவை திரைக்கதை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த மணி ஹைஸ்ட் இணையத் தொடர், பிகில், மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் சட்டென நினைவுக்கு வராமல் இல்லை.

விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்காக மெட்ரோ ரயிலைக் கடத்துவது, மருத்துவமனைகளை சரி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் கடத்தி சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைத் தரப்படுத்துகிறார். இப்படி நம்ப முடியாத, லாஜிக் மீறலான பல காட்சிகள் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கின்றன.

திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டிய இயக்குநர் அதைத் தவிர்த்து பில்டப் காட்சிகளுக்கு மெனக்கெட்டுள்ளார். ஒரு காட்சிக்குப் பிறகு வரும் அடுத்த காட்சி பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. முதல் பாதியில் தோன்றும் 10 நிமிடங்களுக்கு ஒரு பாடல், தேவையற்ற பிளாஷ்பேக் காட்சிகள், சீரற்ற திரைக்கதை ஓட்டம்  என ரசிகர்களின் பொறுமை கடுமையாகச் சோதிக்கப்படுகிறது.

திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குநர் கோட்டை விட்டிருந்தாலும் நடிகர்களும் சரி, தொழில்நுட்ப கலைஞர்களும் சரி தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

நடிகர்கள் ஷாருக் கான் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தந்தையாக வரும் இடங்களிலும், மகன் ஆசாதாக தோன்றும் காட்சிகளிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். ஷாருக் கானுக்கு இணையாக மாஸ் காட்டியிருக்கிறார் நயன்தாரா. விஜய் சேதுபதிக்கு காமெடியுடன் கூடிய வில்லத்தனம் உதவியிருக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் ஒட்டுமொத்த படத்தின் நகைச்சுவைக்கான ஆறுதல். பிரியாமணி , தீபிகா படுகோன், சஞ்சய் தத் நன்றாக நடித்திருக்கின்றனர்.

இருந்தாலும் படத்தை நகர்த்திக் கொண்டு போயிருப்பது எது? மறுப்பே இல்லாமல் அது அனிருத்தான். பாதாளத்தில் இருக்கும் கதைக்குப் பின்னணி இசை கொடுத்தே தூக்கி விடுகிறார் அனிருத். அதேபோல் ஒளிப்பதிவு பணிகளும், படத்தொகுப்பும் ரசிக்க வைக்கின்றன. ஷாருக் கான், நயன் தாராவின் ஸ்லோமோஷன் காட்சிகள் கமர்ஷியலுக்கு கைகொடுத்திருக்கின்றன. அதிரடியாக இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தை தாங்கியிருக்கின்றன. 

சரியாக கவனம் செலுத்தப்படாத எழுத்து ஜவானை தடுமாற வைத்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com