ஜவான் - எந்தெந்த படங்களிலிருந்து உருவா(வி)னது?

ஜவான் திரைப்படத்தின் கதை பல படங்களின் சாயலைக் கொண்டுள்ளது.
ஜவான் - எந்தெந்த படங்களிலிருந்து உருவா(வி)னது?

ஷாருக்கான் - அட்லி கூட்டணி இணைகிறது என செய்தி வெளியானதிலிருந்தே ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலரும் இணைந்தது திரைப்படத்தின் மீதான ஆவலை அதிகப்படுத்தியது.

நீண்ட நாள் படப்பிடிப்புக்குப் பின் இப்படம் நேற்று (வியாழக்கிழமை) திரைக்கு வந்தது. சண்டைக்காட்சிகளை பிரதானமாகக் கொண்ட ஜவான், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும் வசூல் ரீதியாக இதுவரை எந்த இந்தியப் படத்திற்கும் கிடைக்காத வரவேற்பும் கிடைத்துள்ளது. 

இதனிடையே, இயக்குநர் அட்லி என்னென்ன படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து ஜவானை உருவாக்கினார் என்கிற விவாதமும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. தன் முதல் படமான  ‘ராஜா ராணி’ படத்திலிருந்தே இந்தக் ‘காபி கேட்’ சர்ச்சையில் இருப்பவர் அட்லி. 

இந்நிலையில், ஜவான் மட்டும் என்ன விதிவிலக்கா? என பல படங்களின் காட்சிகளை எடுத்து ஷாருக்கானுக்காக கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

அப்படி என்னென்ன காட்சிகளை எடுத்தார்கள்? முதலில் இப்படத்தின் கரு. விக்ரம்  ரத்தோர் என்கிற ராணுவ வீரர், தன் படையினருடன் தீவிரவாதிகளுடன் போரிடும்போது அனைவரின் துப்பாக்கிகளும் செயலிழக்கின்றன. இதனால், சண்டையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகின்றனர். இதற்குக் காரணம், இந்திய ராணுவத்திற்கு துப்பாக்கிகளை அனுப்பும் விஜய் சேதுபதி நிறுவனத்தின் முறைகேடுதான் எனக் கண்டுபிடிக்கிறார்கள். மேலும், இந்த மாதிரியான ஆள்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விக்ரம் உயரதிகாரிகளிடம் சொல்கிறார். இந்தப் புள்ளியில்தான் ஒட்டுமொத்த ஜவான் கதையும் மையம் கொள்கிறது.

இந்தக் கதையை எங்காவது பார்த்ததுபோல் இருக்கிறதா? 2013 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் - அஜித் குமார் கூட்டணியில் உருவான ‘ஆரம்பம்’ படத்தின் கதையேதான்! ஆரம்பத்தில் புல்லட் புரூஃப் ஜாக்கெட். ஜவானில் துப்பாக்கி.

அடுத்ததாக, ஆசாத் (ஷாருக்கான்) என்கிற கதாபாத்திரத்திற்கு சில பெண்கள் உதவி செய்கிறார்கள். ஆசாத்தான் அவர்களின் ஆதர்ச நாயகன். அவர் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்யும் பிள்ளைகள். இப்படை வரும் ஒவ்வொரு காட்சியும் பிகில் படத்தையே நினைவுபடுத்துகின்றன. பிகிலில் கால்பந்து அணியை வழிநடத்தும் நாயகன். ஜவானில், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நியாயம் கேட்கும் பாட்ஷா!

கிளைமேக்ஸ் சண்டையின்போது சஞ்சய் தத் காவல்துறை அதிகாரியாக வருகிறார். அவர் ஆசாத்தை மிரட்டி, தன் வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதைத் தீவிரமாக திரையில் காட்டுகிறார்கள். ஆனால், இறுதியில் அந்தத் திட்டமே ஆசாத்தும் சஞ்சய் தத் கதாபாத்திரமும் இணைந்து செய்த ஒன்றுதான் என டுவிஸ்ட் கொடுத்து ‘மங்காத்தா’ அஜித்தையும் அர்ஜுனையும் நினைவுபடுத்துகிறார்கள். 

எல்லாவற்றையும்விட, இப்படத்தில் அப்பா - மகன் என இரட்டைக் கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார். அப்பாவுக்கு மகன் யாரென்றே தெரியாது. மகனுக்கும் அதேதான். ஆனால், தன் தாய் சொன்னதுபோல் அப்பா மாதிரி நேர்மையான அதிகாரியாக  உருவாக வேண்டும் என்பதே மகனின் லட்சியம்.

இடைவேளைக் காட்சியில், மகன் எதிரிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும்போது கதவுகளை உடைத்துக்கொண்டு அப்பா வந்து, எதிரிகளைத் துவைத்து மகனைக் காப்பாற்றுகிறார். பின், இறுதியில் இருவரும் இணைந்து வில்லனை அழிக்கிறார்கள்.

நினைவு தவறிய அப்பா முன்னாள் ராணுவ வீரர்.. மகன் காவல்துறை அதிகாரி.. இருவரும் நாட்டிற்காக நேர்மையான சேவையை செய்பவர்கள். கிளைமேக்ஸில் அப்பா - மகன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறார்கள். எங்கோ, இந்தக் காட்சியைப் பார்த்ததுபோல் இருக்கிறதே என யோசித்தபடி திரையரங்கைவிட்டு வெளியே வந்தால், ‘சர்தார் படத்தையும் விட்டு வைக்கல’ என்கிற குரலைக் கேட்க முடிந்தது.

மேலும், தன் குருநாதர் ஷங்கர் நினைவாக அந்நியன் முகமூடியையும் கூட எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர்!

இப்படி காட்சிக்குக் காட்சி அட்லி எழுதிய கதையைத் தவிர, ‘ஏழாம் அறிவு’, ‘கத்தி’ என மற்ற எல்லாப் படங்களின் கதைகளும் மூளைக்குள் வந்துசென்று கொண்டே இருக்கின்றன. (ஹிந்தியில் இந்தப் படம் நல்ல வசூல் என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர்கள் தமிழ்ப் படங்களை எல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள்தானே!).

மௌனராகம் - ராஜா ராணி, சத்ரியன் - தெறி, சக்தே இந்தியா - பிகில் என முதலில் ஏதோ ஒரு படத்திலிருந்து தன் படத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்ட அட்லி, இப்போது கலவையாக ‘ஒவ்வொரு படத்திலிருந்து ஒரு காட்சி’ என்கிற புதிய பாணியை ஆரம்பித்திருக்கிறார் போல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com