
எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிக்கவுள்ளவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. திரைப்பட இயக்குநரும் நடிகருமான இவர், சின்னத்திரையிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
எதிர்நீச்சல் தொடரின் மையமாக இருந்துவரும் மாரிமுத்து, நேற்று (செப்.8) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடல் இன்று அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலையில் தகனம் செய்யப்பட்டது. அவரின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கள் தெரிவித்தனர்.
குணசேகரன் பாத்திரத்தில் நடித்து, 'ஏய், இந்தாமா' என தோரணையோடு பேசி மக்கள் மனதில் பதிந்த மாரிமுத்துவுக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வேறு யார் நடிப்பார் என்பது போன்ற பேச்சுகளும் ஒருபக்கம் எழுந்தன.
ஆதி குணசேகரனாக, மாரிமுத்துவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக நடிக்க முடியாது என்றும், அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் குணசேகரன் பாத்திரம் பதிந்துள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது.
எனினும், ஆதி குணசேகரன் பாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்கவைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் எதிர்நீச்சல் குழு ஈடுபட்டு வருகிறது. தொடர் என்பதால், அடுத்தடுத்த எபிஸோடுகளுக்காக வேறு நபரைத் தேடிச்செல்லத்தான் வேண்டும்.
மாரிமுத்துவுக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை குணசேகரன் பாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
இதனால், நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குணசேகரனாக நடிக்கலாம் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் வேல ராமமூர்த்தி மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், குணசேகரன் பாத்திரத்தில் அவர் பொருந்திவருவார். என்றாலும், மாரிமுத்துவின் இடத்தை நிரப்புவாரா? என்பது போன்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பட்டத்து யானை, என்ஜிகே, நம்ம வீட்டுப் பிள்ளை, புலிக்குத்தி பாண்டி, அண்ணாத்தே போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். குற்றப்பரம்பரை போன்ற சில புத்தகங்களை எழுதியுள்ளார்.
எனினும், நடிகர் வேல ராமமூர்த்தி தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.