எதிர்பாராத திருப்பங்கள்.. ஆனால்... இறைவன் - திரை விமர்சனம்

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எதிர்பாராத திருப்பங்கள்.. ஆனால்... இறைவன் - திரை விமர்சனம்

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன்.

சென்னையில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் அர்ஜுன் (ஜெயம் ரவி) உயர்நிலை அதிகாரிகளுக்குக்கூட பணியாமல் குற்றவாளிகளை என்ன செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு எடுத்து அவர்களை அடித்து அடக்குகிறார். இதில் என்கவுன்டர்களும் அடக்கம் என்பதால் காவல்துறையில் இருப்பவர்களே பயத்துடனே அர்ஜுனை அணுகுகிறார்கள். அர்ஜுனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் ஆண்ட்ரூ (நரேன்) தன் நண்பன் என்ன செய்தாலும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார். பல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிய வழக்கு அர்ஜுனிடம் வருகிறது.

சென்னையில் இளம்பெண்களைக் கடத்தி தொடர் கொலையில் ஈடுபட்டு வரும் சைக்கோ கில்லர் பிரம்மா (ராகுல் போஸ்), ஒவ்வொரு கொலையின்போதும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் கடிதம் ஒன்றை எழுதி வைக்கிறான். எத்தனை பெரிய குற்றவாளியையும் கண்டுபிடிக்கும் திறன் கொண்ட அர்ஜுன், பிரம்மாவை நெருங்க முடியாமல் தவிக்கும்போது அவன் இருக்கும் இடம் தெரிய வருகிறது. அங்கு சென்று பிரம்மாவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால், பிரம்மாவால் தாக்குதலுக்கு உட்படும் ஆண்ட்ரு உயிரிழக்கிறார். 

தன்னை பலமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நண்பனை ஒருமுறை கூட காப்பாற்ற முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆட்படும் அர்ஜுன், காவல்துறை பணியிலிருந்து வெளியேறுகிறார். அதேநேரம், சிறையில் இருக்கும் பிரம்மா அங்கிருந்து தப்பித்து அடுத்த கொலையை செய்கிறான். தன் நண்பனைக் கொன்றவனை பழி தீர்க்க வேண்டும் என அர்ஜுன் பிரம்மா ஒளிந்திருக்கும் இடத்திற்கு சென்று அவனை தாக்குகிறான். தொடர்ந்து வந்த காவல்துறை பிரம்மாவை சுட்டுக்கொல்கிறது.

இதோடு பிரச்னை முடிந்தது என நகரம் அமைதியாக இருக்கும்போது பிரம்மா கொலை செய்யும் முறையைக் கொண்டே இன்னும் சில இளம்பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அர்ஜுனுக்கு கொலையாளி கடிதம் மூலம் மிரட்டலும் விடுக்கிறான். என்ன நடக்கிறது எனக் குழம்பும் காவல்துறை மீண்டும் குற்றவாளியைத் தேட ஆரம்பிக்கிறது. யார் அந்த மற்றொரு பிரம்மா? அர்ஜுனுக்கும் அந்த சைக்கோ கொலைகாரனுக்கும் என்ன தொடர்பு? என்கிற மீதிக்கதையை பரபரப்பான திருப்பங்களுடன் கூறியிருக்கிறார் இயக்குநர்.

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இம்முறை கிரைம் திரில்லர் வகை திரைப்படத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்திருக்கிறார். தன் முந்தைய படங்களைப் போல் அல்லாமல் முழுக்க முழுக்க அடுத்தது என்ன? என பரபரப்பான திருப்பங்களை வைத்து வெற்றிபெற்றே ஆக வேண்டும் என இந்தக் கதையை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

சைக்கோ கொலையாளியின் கதை என்பதால் வன்முறைக் காட்சிகள் கொடூரமாகவும் ரசிகர்கள் பெரிதாக முகம் சுழிக்காத அளவிற்கும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் நிறைய ரத்தங்கள் மற்றும் அரை நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. கடத்தப்பட்ட பெண்களை கொடூர ஆயுதங்களால் தாக்கும் காட்சிகளை சென்சார் செய்யவில்லை என்பதால் தத்ரூபமாகவே இருக்கின்றன. 

நடிகர்கள் ஜெயம் ரவி, ராகுல் போஸ் இருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, வன்முறைக் காட்சிகளில் ராகுல் போஸின் உடல்மொழி அச்சத்தைத் தருகிறது. விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், இப்படத்தின் மூலம் தனக்காக வரவேற்பை மேலும் உறுதிசெய்திருக்கிறார். சார்லி, பக்ஸ், ஆசிஷ் வித்தியார்த்தி ஆகியோரின் பங்களிப்பு கைகொடுத்திருக்கிறது.

இறைவன் படத்தின் கடைசி 30 நிமிடங்களை தன் நடிப்பால் பரபரப்பாகவே வைத்திருக்கிறார் நடிகர் வினோத் கிஷன். பாலாவின் ‘நந்தா’ திரைப்படத்தின் மூலம் சிறுவயது சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தவரின் கண்கள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே பயத்தைக் கடத்துகிறது!

கதையின் வேகத்தைத் தடுக்கவே நயன்தாராவை பயன்படுத்தீனார்களா? என்கிற அளவிற்கு அவரின் கதாபாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. இம்மாதிரியான திரில்லர் வகை படங்களில் திரைக்கதைதான் முக்கியம். ஆனால், தேவையற்ற காதல் காட்சிகள், வலிந்து உருவாக்கப்பட்ட உணர்ச்சிகர வசனங்கள் படத்தின் பெரிய வெற்றி வாய்ப்பைக் குறைக்கின்றன.

குறிப்பாக, நன்றாக துவங்கிய முதல்பாதி காதல் பாடலாலும் ஜெயம் ரவி - நயன்தாரா காட்சிகளாலும் வேகத்தை இழந்து பொறுமையை சோதிக்கிறது. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் வன்முறைக்காட்சிகள் பலம் பெருகின்றன. ஆனால், பாடல்களில் கவனம் செலுத்தாதது தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதானந்தத்தின் லைட்டிங் பணிகள் கிரைம் கதைக்கான ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திறைமையாக கையாளப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிக்காகவும் சைக்கோ கில்லர்கள் உருவாகிறார்கள் என்கிற கருவை எடுத்துக்கொண்டு இளம்பெண்கள் கடத்தல், கொலையாளிகளின் மனநிலை, காவல்துறையின் ஈடுபாடு என நேர்த்தியான படத்தை இயக்கியிருக்கிறார் ஐ.அஹமது. சில தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால் இந்த இறைவனை மீண்டும் ஒருமுறை தரிசித்திருக்கலாம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com