உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..!

ரத்தம் திரைப்பட நிகழ்வில் தன் இளைய மகளுடன் கலந்துகொண்டார் விஜய் ஆண்டனி.
உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..!
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தன் அடுத்த திரைப்படமான ‘ரத்தம்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நேற்று(வியாழக்கிழமை) கலந்துகொண்டார். அவர் இல்லாமல் இந்நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன் இளைய மகளை அழைத்து வந்து அருகிலேயே நிற்க வைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் 10 நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு திரைத்துறையினரைத் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவத்தால் கடும் மன உளைச்சலைச் சந்தித்த விஜய் ஆண்டனி, “என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டது மேலும் வலியை ஏற்படுத்தியது. 

தந்தையாக மகளின் மரணம் அவருக்குப் பெரிய சோகத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், தன் நேர்காணல்களில் மிகுந்த நேர்மறையான எண்ணங்களையும் வாழ்க்கை குறித்த தீர்க்கமான பார்வைகளையும் முன்வைத்த விஜய் ஆண்டனி, அதற்கு ஏற்ப ரத்தம் நிகழ்வுக்கு வந்து, தான் உறுதியாக இருப்பதை அறிவித்திருக்கிறார்.

அவர் அளித்த சில பேட்டிகளில், “இழப்பு, துரோகம் என தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பார்த்துவிட்டேன். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அணுகும். எல்லாமே ஒருநாள் மாறக்கூடியதுதான். எல்லாரும் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என்கிற அவசியம்  இருக்கிறதா? வாழ்க்கையில் யாரும் எவ்வளவு உயரத்திற்கும் செல்லலாம். ஆனால், இதையெல்லாம் விட வாழ்க்கைப் பயணமே முக்கியம். மூன்று வேளை பசிக்கும், தூக்கத்திற்கும் சம்பாதித்து விடுங்கள். 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் என் வலது கன்னத்தில் 5 இடங்களில் எலும்பு முறிந்தது. அதிலிருந்து மீண்டாலும் சில இரவுகளில் முகம் கோணலாகிவிடும். அதன்பின், பிச்சைக்காரன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் என் தாடை, மூக்கு எலும்புகள் உடைந்தன. ஆனால், உயிர்பிழைத்து வந்தபின் முன்பு இருந்ததைவிட இன்னும் நம்பிக்கையாக உணர்ந்தேன். யாருக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இப்போது, வலிகளோடு வாழப் பழகிவிட்டேன்.  நடப்பதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கடக்க வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.

தன் தந்தையின் தற்கொலை, மகளின் தற்கொலை என அனுபவிக்கக் கூடாத துயரங்களை எதிர்கொண்டாலும் வாழ்க்கையை மிக நம்பிக்கையுடன் அணுகும் குணமே விஜய் ஆண்டனியை தனித்துவம் மிக்கவராகக் காட்டுகிறது. என்ன நடந்தாலும், ‘உன்னை வாட்டியெடுக்கும் துன்பம் நூறு இருக்கும்.. தடை நூறு கடந்து போராடு’ என தான் நாயகனாக அறிமுகமான ‘நான்’ படத்தின் மூலம் நம்பிக்கை வரிகளுடனே வந்தார். 

இன்றும் ஒருபுறம் கடும் துயரம்  இருந்தாலும் அதே நம்பிக்கையில் தன் இளைய மகளை அழைத்து வந்து, கூறியது போன்றே வாழ்ந்தும் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com