
அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலுள்ள முக்கிய வீதியில் எதிர்நீச்சல் நடிகையின் விடியோ ஒளிபரப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் பர்ஹானா பாத்திரத்தில் நடித்துவரும் ஸீபா ஷெரின் இந்தியாவில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையப் பெற்றுள்ளார். அதனைக் குறிப்பிட்டு நியூ யார்க் நகரிலுள்ள சதுக்கத்தில் ஸீபா ஷெரின் விடியோ ஒளிபரப்பானதாக சமூகவலைதளத்தில் விடியோ பரவி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்தத் தொடரிலுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், டிஆர்பி பட்டியலிலும் எதிர்நீச்சல் தொடர் முதலிடம் வகிக்கிறது.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் மூலம் ஆணாதிக்கம், பிற்போக்குத்தன்மை உள்ளிட்டவற்றை கேள்வி கேட்கும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டு எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மருமகள்கள் புகுந்த வீட்டில் துன்பப்படும் காட்சிகளையும், கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளும் காட்சிகளையும் பல தொடர்கள் எடுத்துவரும் நிலையில், எதிர்நீச்சல் அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
பல சீர்திருத்த கருத்துகள் காட்சிகளாக கதையின் போக்கில் விவாதத்திற்குட்படுத்தப்படுகிறது. அந்தவகையில் ஸீபா ஷெரின் என்ற முஸ்லீம் நடிகை ஹிஜாப் அணிந்தவாறே நடித்துவருகிறார். ஜீவானந்தத்தின் உதவியாளராக பர்ஹானா பாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிப்பதற்கு ஆடிஷனில் தேர்வான நிலையில், ஹிஜாப் அணிந்தவாறுதான் நடிப்பேன் என இவர் வைத்த கோரிக்கையை ஏற்ற இயக்குநர் திருச்செல்வம், ஹிஜாப் அணிந்தவாறு நடிக்க அனுமதி அளித்துள்ளார். அதனால், இந்தியாவில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முதல் நடிகை என்ற பெயரை ஸீபா பெற்றுள்ளார்.
இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டு நியூ யார்க் நகரிலுள்ள முக்கிய கடைவீதியில் ஸீபா ஷெரின் விடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்த விடியோவை நடிகை ஸீபா ஷெரின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு அன்பை இந்த உலகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு பர்ஹானாவின் நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.