தலைவர் நிரந்தரமா? ஜெயிலர் - திரை விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
தலைவர் நிரந்தரமா? ஜெயிலர் - திரை விமர்சனம்

ஓய்வு காலத்தை தன் குடும்பத்தினருடன் கழித்துவரும் முத்துவேல் பாண்டியனின் (ரஜினிகாந்த்) மகனும் காவல்துறை உதவி ஆணையரான அர்ஜுன் (வசந்த் ரவி) தமிழகத்தில் சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒருகட்டத்தில் கோவில்களிலிருந்து தொன்மையான சிலைகளைக் கடத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கும்பலைச் சேர்ந்த ஒரு குற்றவாளியைக் கைது செய்து கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் முக்கியக் குற்றவாளியைக் குறித்து விசாரணையை நடத்துகிறார். 

ஆனால், விசாரணை துவங்கிய சில நாள்களிலேயே அர்ஜுன் காணாமல் போகிறார். காவல்துறை அதிகாரியான தன் மகனைக் காணவில்லை என உயர் அதிகாரிகளை நாடுகிறார் முத்துவேல் பாண்டியன். அப்போது, சிலைக்கடத்தல் தொடர்பாக காணாமல் போன அதிகாரிகள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் உங்கள் மகன் இறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். 

இதைக்கேட்டு உடைந்துபோகும் பாண்டியன், தன்னைப்போல் நேர்மையாக இருந்ததால்தான் மகனைக் கொன்றார்கள் எனக் குற்றவுணர்ச்சி கொள்கிறார். வீட்டிலும் முத்துவேலின் மனைவி லட்சுமி(ரம்யா கிருஷ்ணன்) அவன் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் என்கிறார்.

விரக்தியில் இருக்கும் முத்துவேல் தன் மகனைக் கொன்றதாக சந்தேகப்பட்ட குற்றவாளியைக் கொல்கிறார். ஆனால், முக்கியக்  குற்றவாளியான வர்மனிடமிருந்து(விநாயகன்) முத்துவேல் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வருகிறது. காணாமல் போன மகன் என்ன ஆனான்? மகனுக்காக வில்லனை தேடிச் செல்லும் முத்துவேல் பாண்டியன் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார்? என்கிற மீதிக்கதையை அதிரடியான ஆக்சனுடன் திரைக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

முதல்பாதி முழுக்க நெல்சன் தன் பாணியிலான நகைச்சுவைக் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அதேநேரம், ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான சூப்பர் ஸ்டாரையும் திரையில் காட்சிப்படுத்தியுள்ளனர். வயதான குடும்பத் தலைவனான முத்துவேல் பாண்டியன் வரும் காட்சிகளில் விசில் சத்தம் கேட்கிறது. ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக உருமாறும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. 

முக்கியமாக அறிமுக பாடல் இல்லாமல், பெரிய பஞ்ச் வசனங்களைப் பேசாமல் இருந்தும்கூட ரஜினியின் இமேஜ்க்கு துளி பாதிப்பும் வராமல் தன்னுடைய பாணியில் வெற்றிபெற்றிருக்கிறார் நெல்சன். ரஜினியுடன் யோகிபாபு வரும் காட்சிகளிலும் சிரிப்பலை எழுகிறது.

மேலும், ரஜினிக்கு இணையான பலம்கொண்ட வில்லனாக விநாயகனை நடிக்க வைத்திருப்பது சிறப்பான தேர்வு. கொடூர கொலைகாரனாக ஆசிட் தொட்டிகளில் உடல்களை இறக்கும் காட்சிகளிலும் நகைச்சுவையாக பேசும் காட்சிகளிலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ஜாபர், சுனில், கிங்கிஸ்லி ஆகியோரின் கதாபாத்திரங்கள் நன்றாக கதையுடன் ஒன்றிப்போகின்றன.

ஃபிளாஷ்பேக் காட்சியில் திகார் சிறைச்சாலையில் ஜெயிலராக பணிபுரிந்த ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் தோற்றத்தில்  ‘சிவாஜி’ ரஜினியை பார்க்க முடிந்தது. இந்தக் காட்சி முடியும் வரை  ‘பழைய’ ரஜினி திரையில் அதகளம் செய்கிறார். 

ஜெயிலராக இருந்த காலத்தில் முத்துவேல் பாண்டியனுக்கு விஸ்வாசமாக இருந்த கேங்க்ஸ்டர்களான நரசிம்மா(சிவராஜ்குமார்), மாத்யூவ் (மோகன் லால்), ஜாக்கி ஷராஃப் ஆகியோர் நிகழ்காலத்தில் முத்துவேல் பாண்டியனுக்கு உதவும் காட்சிகள் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தோற்றம் என்றாலும் சிவராஜ் குமாரும் மோகன்லாலும் ரசிகர்களைக் கொண்டாட வைக்கின்றனர்.

பின்னணி இசையில் அனிருத் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பது இந்தப் படத்தில் மேலும் உறுதியாகியிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்காகவே பல இடங்களில் பின்னணி இசை விசில் பறக்க வைக்கிறது. தமன்னா நடனத்தில் ‘காவாலா’ பாடலும் நன்றாக இருக்கிறது.

முதல்பாதியில்  இருந்த வேகம் இரண்டாம்பாதியில் காணாமல் போவதும் திரைக்கதையில் இடம்பெற்ற தேவையில்லாத காட்சிகளும் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளன. சில சண்டைக்காட்சிகள் நம்பகத்தன்மையை இழப்பதும் பின்னடைவு. 

அண்ணாத்த, பீஸ்ட்  தோல்விகளுக்குப் பின் ரஜினி - நெல்சன் இருவருமே அடுத்ததாக வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ‘ஜெயிலர்’ மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

ஜெயிலர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருவரும் பூர்த்தி செய்திருக்கின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com