கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் சில அபூர்வமான தருணங்கள் வாய்த்துவிடுகின்றன. ஒரு நல்ல கலைஞன் மற்றொரு சிறந்த கலைஞனை சுலபமாக அடையாளம் கண்டுகொள்கிறான் அல்லது கலை வெளிப்பட தகுதியான ஒருவனை தனியாக பிரித்தறிகிறான். அந்த வகையில், இயக்குநர் மணிகண்டனின் படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் தனித்துவங்களாக திரையை ஆட்சி செய்யக்கூடியவர்கள்.
ஆண்டவன் கட்டளை - விஜய் சேதுபதி, குற்றமே தண்டனை - விதார்த் அந்த வகையில் அவர்களைத் தாண்டிய கதாபாத்திரமாக நல்லாண்டியை அறிமுகப்படுத்தினார். கரோனாவுக்கு முன்பே ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் பணிகள் முடிந்தாலும் 4 ஆண்டு போராட்டத்திற்குப் பின்பே படம் திரைக்கு வருகிறது. ஆனால், அதற்குள் நல்லாண்டி உடல் நலக்குறைவால் காலமானார். இறுதிவரை அவரால் ‘கடைசி விவசாயி’ படத்தை தன் குடும்பத்தினருடன் பார்க்க முடியவில்லை.
சொந்த வாழ்க்கையிலும் கடினமான உழைப்புகளைச் செய்யக்கூடிய விவசாயியாகவே நல்லாண்டி இருந்திருக்கிறார். படப்பிடிப்பும் பெரும்பாலும் அவர் வசித்த, பக்கத்து கிராமங்களிலேயே காட்சிப்படுத்துப்பட்டுள்ளன.
ஆனால், நடிப்பதில் முன்பின் அனுபவமில்லாத பெரியவர் நல்லாண்டியை அழைத்து வந்து படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக, அதுவும் படம் முழுக்க வரக்கூடிய ஒருவராகக் கொண்டு வந்து வெற்றியைப் பெற்றார் இயக்குநர்.
அவரை நடிக்க வைக்கக் காரணமும் இருந்திருக்கிறது. இயல்பு வாழ்க்கையிலும் இயற்கை விவசாய நுணுக்கங்ளை அறிந்தவர் நல்லாண்டி. எந்தப் பயிருக்கு எந்த உரத்தை போட வேண்டும் என்பதை அனுபவ ரீதியாகவே கற்றுத்தேர்ந்தவர். ‘கடைசி விவசாயி’ படத்தின் சில காட்சிகளில் அதைக் காணலாம். மிக விருப்பத்துடனே படப்பிடிப்புகளில் கலந்துகொண்டுள்ளார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்குப் பின்பும் தன் குடும்பத்தினரிடம் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்.
படப்பிடிப்பில் பல டேக்களை நல்லாண்டி வாங்கியிருக்கக் கூடும். ஆனால், நீதிமன்றத்தில் நீர் இல்லையென்றால் பயிர் இறந்துவிடும் என தன் பேரனிடம் வாதாடும் காட்சியிலும் கிளைமேக்ஸில் புத்தாடை உடுத்தி நெல்லை சுமந்து வரும் காட்சியிலும் பலராலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாததைக் கூறியிருக்கிறார்கள். முக்கியமாக, மேஜையில் படுத்தியிருப்பவர் திடீரென எழும்போது ரசிகர்களிடம் உண்டான மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு அக்கதாபாத்திரமாகவே இருந்தார்.
இதையும் படிக்க: ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?
வெளியீட்டிற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துகொண்ட கடைசி விவசாயிக்கு, மொழிவாரிப் பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது மேலும் மதிப்பைக் கொடுத்திருக்கிறது. முக்கியமாக, நல்லாண்டிக்கு சிறப்பு விருதை அறிவித்து அவர் குடும்பத்தினருக்கு கௌரவத்தைக் அளித்திருக்கிறார்கள்.
நல்லாண்டி இறந்தபின், வெளியான படத்தைப் பார்த்த அவரது மகள் ஒரு நேர்காணலில், ‘எங்கப்பா இந்த படத்துக்குள்ளதான் இருக்கார்’ என்கிறார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் விருதுக்காக தில்லிக்குச் செல்ல ‘என்னப்பா.. போவமா?’ என்றிருப்பார்.
கலையில் ஈடுபட்ட எவருக்கும் முழுமையான அழிவு இல்லை. வயதான பல விவசாயிகளைப் போல் சாதாரணமாக மடித்திருக்க வேண்டியவர் இனி காலத்திற்கும் கடைசி விவசாயியாக தலைமுறை கடக்கக் காத்திருக்கிறார். நாயகனாகவும்!