
கேரளத்தின் கடலோரப் பகுதியான கொத்தாவில் கண்ணன் பாய் (சபீர்) எங்கிற கேங்கஸ்டரின் கட்டுப்பாட்டில் போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. அந்த ஊரின் முக்கியக் குற்றவாளியும் அவர்தான். பணியிட மாறுதலில் அப்பகுதிக்கு காவல் ஆய்வாளராக வருகிறார் ஷாகுல் ஹாசன் (பிரசன்னா). பொறுப்பேற்றுக்கொண்ட நாளே கொத்தாவிலுள்ள குற்றவாளிகளின் கையொப்பத்தை வாங்கி வரச் சொல்கிறார். ஆனால், கண்ணன் பாய்யை தவிர அனைவர் பெயரும் பதிவேட்டில் இருக்கிறது.
ஆத்திரமடைந்த ஷாகுல், கண்ணன் இருக்கும் இடத்திற்கே செல்கிறார். அங்கு, இந்த ஊரில் தன் அதிகாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கூறும் கண்ணன் காவல் ஆய்வாளரை மிரட்டி அனுப்புகிறான். நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் தன்னால் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் இருப்பவருக்கு ராஜுவின் (துல்கர் சல்மான்) கதையை இன்னொரு அதிகாரி சொல்கிறார்.
கண்ணனுக்கு முன் கொத்தாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ராஜுதான். அவனைக் கண்டு நடுங்காத தாதாக்களே இல்லை. ஆனால், எவ்வளவு குற்றங்களைச் செய்தாலும் மக்களின் பிரச்னைகளையும் ராஜு தீர்த்து வைப்பவன். கண்ணன் அவனின் நண்பனாக இருந்தவன். உடனே, அதிகாரத்தில் இருந்து கண்ணனை ஒன்றும் செய்யமுடியாது எனக் கூறும் ஆய்வாளர், ராஜுவைக் கொத்தாவிற்குள் மீண்டும் வர வைக்க திட்டமிடுகிறார். அந்த ஊரைவிட்டு ராஜு ஏன் வெளியேறினான்? கண்ணனுக்கும் அவனுக்கும் எதனால் பிரச்னை ஏற்பட்டது? கொத்தாவிற்குள் மீண்டும் ராஜூ நுழைந்தானா? என்கிற மீதிக்கதையை அதிரடி சண்டைக்காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.
வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களுக்கே உண்டான லாஜிக் இல்லாத கதையாக இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. நாயகனும் வில்லனும் ராணுவமே வந்தாலும் எங்களுக்குக் கீழ்தான் என இஷ்டத்துக்கு ஆள்களை வெட்டித்தள்ளியிருக்கிறார்கள். அதை நியாப்படுத்த ரசிகர்களின் மண்டையில் எதையாவது திணித்தால் போதும் என பலவீனமான காட்சிகளை வலுக்கட்டாயமாக ஊட்டியும் விடுகிறார்கள்.
கொத்தாவிலிருந்து சென்ற ராஜு, உத்தரப் பிரதேசத்தில் ராஜு மதராஸியாக ஒரு அவதாரம் வேறு எடுக்கிறார். அங்கும் எதிரிகளைக் கொன்று குவிக்கும் ராஜு, தன் கையில் ஆயுதம் என எதையும் வைத்துக்கொள்வதில்லை. கையில் கிடைக்கும் பேனா, பிளேடு இதை வைத்த கூட்டத்தை ஓட வைக்கிறார்!
போதைப்பொருள்களை மட்டுமே கதையாக வைத்து இன்னும் எத்தனை இயக்குநர்கள் திரைப்படம் எடுத்து அச்சுறுத்தப் போகிறார்களோ என நினைக்கும் அளவிற்கு இந்தக் ‘கரு’ கசந்தே விட்டது.
இதையெல்லாம் விட, ஊரில் காவல்துறைக்கு என்ன வேலை என்றே தெரியாத அளவிற்கு இன்றைய கேங்க்ஸ்டர் படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு கைதும் இல்லை மிரட்டலும் இல்லை. பணத்திற்கு அடிமையான அதிகாரிகள் என ஒற்றை வரியில் மொத்த காவல்துறையும் திரைக்கதையில் கடந்து சென்றுவிடுகிறது.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் துல்கர் சல்மான், இப்படத்தில் தன் கவனத்தை செலுத்தியிருக்கலாம். கொத்தாவில் இருந்த ராஜுவின் கதாபாத்திரத்திற்கு தன் உடல்மொழியால் வலு சேர்த்திருக்கிறார். ஆனால், நடிப்பில் பெரிய வித்தியாசங்கள் தென்படவில்லை.
சார்பட்டாவில் கலக்கிய சபீர் இப்படத்தில் தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். நக்கலான உடல்மொழியை சுலபமாக திரைக்குக் கடத்த அவரால் முடிகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் ஆகியோரும் தங்களுக்கான பணியை சரியாகச் செய்திருக்கிறார்கள். சபீரின் ஜோடியாக வரும் நைலா உஷா பார்வையிலேயே அசரடிக்கிறார். நல்ல அழகி!
இயக்குநர் அபிலாஷ் ஜோஷி, கால்பந்தாட்டப் போட்டி மற்றும் கிளைமேக்ஸ் சண்டையைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது. ஆனால், சண்டைக் காட்சிகளில் செலுத்திய கவனத்தைத் திரைக்கதையில் காட்டியிருக்கலாம். சாதாரணமான கதையை 2.45 மணி நேரம் இழுத்து பொறுமையைச் சோதிக்கிறார். ‘ஒரு மனிதனை ஒரு சூட்கேஸுக்குள் அடைத்து விடலாம் என்பது அவன் நம்பிக்கை’ உள்பட சில வசனங்கள் காட்சிகளுடன் பார்க்கும்போது நன்றாக இருந்தன.
‘கலாட்டாக்காரன்’ என்கிற பாடலில் ரித்திகா சிங் சிறப்பு நடனம் ஆடியிருக்கிறார். ரெட்ரோ பாணியிலான அப்பாடலின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.
படத்தின் கதை 1986 - 96களில் நடப்பதைப் போன்று காட்சிப்படுத்தியிருந்ததால் கலை இயக்குநர் அட்டகாசமான செட்களை அமைத்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னனி இசையும் சண்டைக்காட்சிகளைப் பரபரப்பாகக் கொண்டு செல்கிறது.
பார்க்க விரும்பும் இடங்களை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என நினைப்பதைப்போல், பொறுமையிருந்தால் கிங் ஆஃப் கொத்தாவிற்கு ஒருமுறை சென்று வரலாம்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...