மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான நிவின் முக்கிய கதாபாத்திரங்களிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக, ’தட்டத்தின் மரையத்து’, ‘1983’, ‘நேரம்’ ஆகிய படங்கள் தொடர் வெற்றிபெற்றன.
அதன்பின், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் தென்னியந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்போது முதல் நிவின் பாலிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் நிவின் பாலி அதீத எடையுடன் காணப்பட்டார். அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படமாக அமைந்தன. இதனால், அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின், மீண்டும் உடல் எடையைக் குறைத்தார். ஆனாலும், பழைய தோற்றத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை.
இதையும் படிக்க: ஜெயிலர் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதேநேரம், இறுதியாக அவர் நடித்த, 'மஹாவீர்யார்’, ‘படவெட்டு, ‘சாட்டர்டே நைட்’, ‘துறமுகம்’ ஆகிய படங்கள் கடும் தோல்வியைச் சந்தித்தன. இதனால், நிவின் பாலியின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறைந்தது. இந்நிலையில், இன்று ராமச்சந்திரன் பாஸ் அண்ட் கோ என்கிற புதிய படம் வெளியாகி அதுவும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தின் அடுத்த பெரும் நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிவின் பாலி மோசமான கதை தேர்வுகளால் தன் மார்க்கெட்டை இழந்து வருகிறார்!