பிரபாஸின் ரத்த பூமி .. சலார் - திரை விமர்சனம்

பிரபாஸ். பிருத்விராஜ் நடிப்பில் உருவான சலார் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபாஸின் ரத்த பூமி .. சலார் - திரை விமர்சனம்

வெளிநாட்டிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியா வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவர் இந்தியாவிற்குள் வந்தால் அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பது ஆத்யாவுக்குத் தெரியாது. தன் மகள் இந்தியாவுக்கு தனியாக வந்திருப்பதை அச்சத்துடன் தன் கூட்டாளி பிலாலிடம் (மைம் கோபி) தெரிவிக்கிறார். உடனே, பிலால் தன் நண்பன் தேவாவிடம் (பிரபாஸ்) விசயத்தைச் சொல்லி அவரைக் காப்பாற்ற உதவி கேட்கிறார். 

தேவா அசாமில் தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) அமைதியாக வாழ்ந்து வருகிறார். தன்னைச் சுற்றி என்ன பிரச்னை நடந்தாலும் அதைக் கடந்து செல்வேன் என தன் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் ஆத்யாவைக் காப்பாற்றி தன் வீட்டிலேயே பாதுகாப்பாக வைக்கிறார். 

மறுபுறம் ஆத்யா இந்தியா வந்ததை அறிந்துகொண்ட எதிரிகள் அவரைத் தேடி தேவாவின் இடத்திற்கே செல்கின்றனர். அங்கு தேவா, தாக்க வந்தவர்களை அடித்து விரட்டுகிறார். ஒருகட்டத்தில், ஆத்யாவைக் கடத்தியது கான்சார் மன்னன் வர்தா மன்னார் (பிருத்திவிராஜ்) ஆள்கள் எனத் தெரிய வருகிறது. கான்சார் முத்திரை இருந்தும் தேவா அதைப் பற்றி கவலைப்படாமல் எதிரிகளைக் கொடூரமாக அடித்து வீழ்த்துகிறார்.

யார் இந்த தேவா? என ஒரு கதாபாத்திரம் கேட்கும்போது , ‘கான்சார் முத்திரையை உருவாக்கியவன்’ என்பதுடன் படத்தின் கதை தீவிரமாகிறது. அது என்ன கான்சார்? வர்தராஜனுக்கும் தேவாவுக்கும் இடையே என்ன நடந்தது? என்கிற கதையை  ‘சீஸ்பயர்’ என்கிற பெயரில் முதல் பாகமாக உருவாக்கியிருக்கிறார்கள். பிரம்மாண்ட பொருள் செலவு, ஆயிரத்துக்கும் அதிகமான நடிகர்கள், கற்பனையே செய்யமுடியாத நிலம் என ஒரு ஆக்சன் படத்துக்கு எவ்வளவு மெனக்கெட முடியுமோ அந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் சலார் படக்குழுவினர். 

தன் படங்களுக்கென பாகங்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்திய இயக்குநர்களிடமிருந்து விலகி ஒரு புனைவு நிலத்தையே கதைக்குள் கொண்டு வந்து புதிய பாணியை உருவாக்கிய பிரசாந்த் நீல், சலார் படத்திலும் தன் கதை உத்தியால் ரசிக்க வைக்கிறார்.  முக்கியமாக, சலார் இடைவேளைக்கு முந்தைய சண்டைக்காட்சி அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்,  ‘சலார்’ படத்திலும் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தன் கதைக்கான ஒரு புனைவு உலகத்தை உருவாக்கி அதில் சண்டையை மட்டுமே நிரப்பி  படத்தை எடுத்திருக்கிறார். 

தன் நண்பனுக்கு என்ன நடந்தாலும் யாரையும் சும்மா விடாத ஒருவன், அதே நண்பனுக்கே எதிரியாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற பழைய காலக் கதையை எடுத்துக்கொண்டு, இன்றைய சினிமா தொழில்நுட்பம் மற்றும் பெரிய தயாரிப்பை நம்பி ‘சலார்’ படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த். கேஜிஎஃப் படத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்ட வசனங்கள், சலாருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. சில இடங்களில் இன்னுமா இந்த ‘அண்ணாமலை’ கால வசனத்தைப் பேசுவது? என சிரிப்புதான் வருகிறது. 

கேஜிஎஃப் என்கிற புனைவு நிலத்தை உருவாக்கியதுபோல் சலாரில் ‘கான்சார்’ என்கிற இடத்தை உருவாக்கி அதை யார் ஆட்சி செய்வது என்கிற கேள்வியை முன்வைத்தே இப்படத்தின் கதையும் நகர்கிறது. பல காட்சிகளில் சலார், கேஜிஎஃப் படத்தையே நினைவுப்படுத்துவது மிகப்பெரிய பலவீனம். படத்தில் உண்மையிலேயே ரத்த ஆறு ஓடுவதுபோல் கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. திரையில் சிவப்பு நிறத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத அளவிற்கு கிளைமேக்ஸில் பிரபாஸ் வாளுடன் பலரை வெட்டி வீழ்த்துகிறார். கேஜிஎஃபில் துப்பாக்கிகளுக்கு என கொஞ்சம் லாஜிக் இருந்தது. ஆனால், சலாரில் நாயகனை யாருமே நெருங்க முடியாத மாதிரி ஓவர் பில்டப்! முக்கியமாக, படத்தின் அதீத வன்முறைக் காட்சிகளுக்காக தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.

ஆனால், பிரபாஸ் அறிமுக சண்டைக் காட்சியில் பலரை கொடூரமாக அடிப்பதை சிறுவர்கள் கைதட்டி, சல்யூட் அடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்திருக்கிறார். குழந்தைகளுக்கு வன்முறையை ஊக்குவிக்கக் கூடாது என்கிற புரிதல் கூட இல்லாத இயக்குநரை என்னவென்று சொல்வது? 

படத்தில் எந்த இடத்திலும் உணர்ச்சிகர காட்சிகள் கைகொடுக்கவில்லை. மிக மேலோட்டமாக வலிந்தே அந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன. ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்களின் விமர்சன ரீதியான தோல்விகளுக்குப் பின் பிரபாஸ் இந்தப் படத்தில் மீண்டு விடுவார் எனத் தோன்றுகிறது. அவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த மிகை நடிப்பும் இல்லாமல் செய்திருக்கிறார். அவரது தோற்றமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வர்தராஜ மன்னார் என்கிற கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்த பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பும் நன்றாக இருந்தது. முதல் பாகத்தில் நண்பனாக நடித்திருக்கிறார். அடுத்த பாகத்தில் வில்லன் என்பதால் அவருடைய கதாபாத்திரம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. கதைக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பையே ஸ்ருதி ஹாசனும் வழங்கியிருக்கிறார். 

நடிகை ஷ்ரேயா ரெட்டி தன் உடலமைப்பிலேயே மிரள வைக்கிறார்.   அவர் அறிமுகமானதும் விசில் பறக்கிறது. ‘திமிரு’ ஈஸ்வரியை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை!

சிறிது நேரம் வந்தாலும் நடிகர்கள் மைம் கோபி, பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் கவனத்தை ஈர்க்கும் படியான நடிப்பை வழங்கியுள்ளனர். 

சலாருக்கு உயிர் கொடுத்தது பிரசாந்த் திட்டமிட்ட சண்டைக்காட்சிகள் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியிருப்பது இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசைதான். சண்டைக்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதிலிருந்து அதன் தாக்கம் குறையவே கூடாது என்பதற்காக திரை அதிர இசையமைத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் பின்னணி இசை மிகத்தொந்தரவாகவும் இருக்கிறது. புவன் கௌடாவின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. எங்கும் சோர்வைத் தராத எடிட்டிங் கூடுதல் பலம்.

இந்திய சினிமாவுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. உலகம் முழுக்க இருக்கும் முக்கியமான இயக்குநர்களின் படங்களையெல்லாம் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாமல் குறிப்பிடும் நம்மூர் இயக்குநர்கள், தங்களின் படத்தில் மட்டும் ஏன் அதையெல்லாம் கவனத்தில் கொண்டு வருவதில்லை எனப் புரியாத அளவிற்கே படம் எடுக்கிறார்கள்.

இன்றைய வன்முறைப் படங்கள் ஆக்சனை ரசிக்கும் மனநிலையிலிருந்து பக்கத்தில் இருப்பவர்களை அடித்தால் என்ன என்கிற அளவிற்கு வெறியைத் தூண்டுவதுபோல் உருவாக்கப்படுகின்றன. அத்தனை ரத்தம், அத்தனை ஆயுதம், அசைக்க முடியாத நாயகன்.. இந்த வெறியாட்டத்தின் போக்கிலிருந்து சலாரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com