விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘ரன் பேபி ரன்’: திரை விமர்சனம்

இறுதிவரை ஏமாற்றமளிக்காத திரைக்கதை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. 
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘ரன் பேபி ரன்’: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகத் தொடங்கி இன்று கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் முந்தைய படங்களான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நாயகனாகக் ரன் பேபி ரன் திரைப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். இந்தப் படத்தை ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணிற்கு உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஆர்ஜே பாலாஜி அதிலிருந்து வெளிவந்தாரா இல்லையா என்பதே ரன் பேபி ரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. நல்ல மதிப்பெண்களுடன் மெரிட்டில் உயர்கல்வி படிக்க வரும் ஆதரவற்றவர்களை அங்கிருந்து துரத்தி அவர்களின் இடத்தை பெரும் பணம் படைத்தவர்களுக்கு விற்பனை செய்யும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். 

இதுவரை நகைச்சுவை நடிகராக, கதாநாயகனின் நண்பனாக மட்டுமே இருந்து வந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பாதையிலிருந்து விலகி முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் கதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்கு பாராட்டுகள். திரைப்படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை பார்வையாளர்களுக்கு எந்தவொரு கவனச்சிதறலும் ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது திரைக்கதை. 

தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாகவும், தனக்கு அடைக்கலம் கொடுக்குமாறும் ஆர்.ஜே.பாலாஜியிடம் சரணடைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். திருமண நிச்சயமான ஆர்.ஜே.பாலாஜியோ மிகுந்த தயக்கத்திற்கு மத்தியில் சம்மதிக்கிறார். ஒரு இரவு கடந்த பிறகு அறையில் பிணமாகக் கிடக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படி அவர் இறந்து போனார் என்பது தெரியாமால் அதிர்ச்சிக்குள்ளாகும் ஆர்.ஜே.பாலாஜி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சியால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே ஒட்டுமொத்த படம்.

க்ரைம் த்ரில்லர் என்பதால் அதற்கேற்ற வகையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள் இருக்கின்றன. திரைப்படத்தின்  முதல்பாதியில் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சடலத்தைத் தூக்கிக் கொண்டு அவர் அலையும் காட்சிகள் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தைத் தூண்டுகின்றன. முதல் பாதி தப்பிப்பதில் ஆர்வம் காட்டும் ஆர்.ஜே.பாலாஜி இரண்டாவது பாதியில் வில்லனைக் கண்டுபிடிக்க ஓடுகிறார்.

முன்பே குறிப்பிட்டதைப் போல ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு நன்றாக கைகொடுத்திருக்கிறது. எங்காவது காமெடி செய்கிறேன் என அவர் முயற்சித்திருந்தால் ஒட்டுமொத்த படமும் அதன் தன்மையை இழந்திருக்கும். அந்த வகையில் இயக்குநர் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உடைந்து அழுது தற்கொலைக்கு முயலும் ஆர்.ஜே.பாலாஜி தனது தாயிடமிருந்து வரும் அழைப்பையடுத்து தற்கொலை முயற்சியை கைவிடும் காட்சிகள் நெகிழ்ச்சியாக இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதாநாயகி இவர்தான் என குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. சில காட்சிகள் மட்டும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் காட்சி அனுபவத்திற்கு பலமாக உள்ளது.   

முதல்பாதியில் இருந்த ஈர்ப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. சராசரி இளைஞன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்டால் என்னாகும் எனக் காட்டும் இடங்கள் இயல்பாகவும், வில்லனை துரத்திச் செல்லும் காட்சிகள் மீண்டும் சினிமாத்தன்மைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டது போலவும் இருப்பதை உணர முடிகிறது. காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஆர்.ஜே.பாலாஜியை நெருங்கிவிட்ட பிறகும் எதற்காக அவரைக் கைது செய்யக் காத்திருக்கிறார்? காவல்துறைக்கு கிடைக்காத ஆதாரங்கள் ஆர்.ஜே.பாலாஜிக்கு எளிதாகக் கிடைப்பதெல்லாம் லாஜிக் தவறுகள். 

எனினும் நல்ல க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கிறது ரன் பேபி ரன். இறுதிவரை ஏமாற்றமளிக்காத திரைக்கதை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com