’தொடர் உதவிகளைச் செய்யும் சிவகார்த்திகேயன்..’: பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயன் செய்து வருகிற உதவிகள் குறித்து பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
’தொடர் உதவிகளைச் செய்யும் சிவகார்த்திகேயன்..’: பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி
Published on
Updated on
2 min read

நடிகர் சிவகார்த்திகேயன் செய்து வருகிற உதவிகள் குறித்து பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன்.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சிவகாரத்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சீன்னா...சீன்னா’ பாடல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே..’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். 

அதில், “சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி. அப்பல்லோவில் அட்மிட். அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை. அவர் பணியாற்றும் நிறுவனத்தினர் ஒருபுறம் போராட, நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம். அ.வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், திரட்டிய தொகை போதவில்லை. “சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?” என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன்.

காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்துகொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை.

இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறு வழியே இல்லை. விஷயத்தைத் தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாகக் கொட்டித் தீர்த்தபோது, “நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்...” என்றார் சிவா.

சட்டென ஒரே ஒரு போனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக்கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும். “திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் தம்பி...” என வற்புறுத்திச் சொன்னேன்.

“அவர் ரொம்ப முக்கியமான ஆள். பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர். ஹாஸ்பிடலில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க...” என தம்பி நவநீதனை பணித்து, சிவா காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். “என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே...” என நெகிழ்ந்து போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல்.

நெல் ஜெயராமன் தொடங்கி நீட் பயிற்சிக்குப் போராடிய பூக்கொல்லை சகானா வரை எத்தனையோ பேருக்கு சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். பேருக்கு உதவினோம் என்றில்லாமல், தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிப்பதும் மேற்கொண்டு உதவுவதுமாக சிவா காட்டும் அக்கறை உண்மையானது; பரிபூரணமானது. நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை இன்றளவும் ஏற்று வருகிறார் சிவா. இன்னும் பட்டியலிட நிறைய இருக்கின்றன. எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத்தம்பி SivaKarthikeyan அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

ஒருவருடைய வெற்றியும் சம்பாத்தியமும் அவருக்கும் அவர் குடும்பத்துக்காகவும் மட்டுமே அல்லாமல், பலருக்குமான பலனாக அமைவது பெரிய சிறப்பு. அந்த வகையில் தம்பி சிவகார்த்திகேயன் எல்லோருக்குமான நம்பிக்கை!” எனத் தெரிவித்துள்ளார்.

இப்பதிவில் பலர் நெகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com