
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வு குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகவுள்ளது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் சனிக்கிழமை(ஜன.28) முதல் குக் வித் கோமாளி போட்டி ஒளிபரப்பபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிறார்.
இந்நிலையில், கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக நடித்து வருவதால் அவர்கள் மூவரும் பங்கேற்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | பிக் பாஸ் சீசன் 6 நிறைவு: டிவிட்டரில் தொடரும் ரசிகர்களின் மோதல்!
மேலும், புதிய கோமாளிகளாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. பழைய கோமாளிகள் சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, பிக் பாஸ் தாமரை உள்ளிட்டோர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோமாளிகளால் கடந்த மூன்று சீசன்களால் வெற்றி பெற்ற ‘குக் வித் கோமாளி’ பழைய கோமாளிகளின் பங்கேற்பு இல்லாமல் இந்த முறை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.