மாமன்னன் தனபால் என்றால்... ஃபஹத் ஃபாசில் யார்?

மாமன்னன் கதாபாத்திரம் முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் என்றால் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாமன்னன் தனபால் என்றால்... ஃபஹத் ஃபாசில் யார்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 திரைகளில் திரையிடப்பட்ட மாமன்னன் முதல்நாள் வசூலாக ரூ.9 கோடியைக் கடந்துள்ளதாக தகவல்.

இந்நிலையில், படத்தின் வெற்றி, தோல்வி குறித்த விமர்சனங்களைத் தாண்டி முக்கியமான விவாதம் ஒன்று எழுந்துள்ளது.  

மாமன்னனாக நடித்த வடிவேலு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்சிப்படுத்தப்பட்டு இறுதியில் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பேரவைத் தலைவராக செயல்பட்ட தனபால்தான் இதில் மாமன்னன் என சமூக வலைதளங்களில் வைரலாகும் அளவிற்கு விவாதங்கள் எழுந்துள்ளன. 

காரணம், தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தனபால் நிகழ்ச்சியொன்றின்போது தன் வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சியினர் அந்த விருந்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சி பற்றி நன்றாக நடந்ததா என விசாரித்த ஜெயலலிதாவிடம், கட்சிக்காரர்கள் எல்லாரும் வந்தார்கள், ஆனால், சாப்பிடாமல் போய்விட்டனர் என்று தெரிவித்தாராம் தனபால்.  இதனைக் கேட்ட ஜெயலலிதா எரிச்சலுற்று, உடனடியாக அவருக்கு உணவுத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கியதோடு பின், சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார். யாரை எல்லாரும் மதிக்கவில்லையோ அவர்கள் அனைவரும் பேரவைத் தலைவராக வரும்போது எழுந்துநின்று மரியாதை தரும்படி ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

இப்படம் பேச வந்த சமூகநீதியை அப்போதே ஜெயலலிதா காப்பாற்றியவர் எனக் குறிப்பிட்டு  சமூக ஊடகங்களில் பல பதிவுகள் வந்தபடியே இருக்கின்றன. 

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில், படத்தில் சில விஷயங்கள் மறைமுகமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படம் ‘கொங்கு மண்டல’ அரசியலைப் பேசியிருக்கிறது. குறிப்பாக, சேலம் ‘காசிபுரம்’ (புனைபெயர்) தொகுதிதான் மாமன்னனின் தொகுதி. நாமக்கல் மாவட்டத்தின் ‘இராசிபுரம்’ தொகுதியில்  கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்றவர் பி.தனபால்!

இந்த இடத்தில்தான் நடுநிலையாளர்களிடமும் திமுகவினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படத்தில் அதிமுக தலைவர் பெயர் அடிபடுவதைக் கட்சியினர் விரும்பவில்லை. 

இதனால், இந்தக் கதாபாத்திரம் குறித்து சர்ச்சை எழுந்தபடியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் வில்லனாக நடித்த ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் யாரைக் குறிக்கிறது? என ஆளுங்கட்சியினர் உள்பட பலரும் கேள்விகளை எழுப்பித் தங்களுக்குத் தேவையான பதில்களையும் கூறிக்கொண்டிருக்கின்றனர். 

படத்தின் கதை சேலத்தில் நடப்பதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மிக எளிதாக அதிமுகவின் பெரிய தலைவர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவர்தான் அப்போது மாவட்ட செயலர் என்று சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சமூகநீதியை கொள்கையாகக் கொண்ட இரு பெரும் கட்சிகளை ஒரே பாத்திரத்தில் போட்டு குலுக்கி தனக்கான ஆட்டத்தை ஆடியிருக்கிறார் மாரி செல்வராஜ். கதை கேட்டுதான் உதயநிதி நடித்தாரா? என சொந்தக் கட்சியிலேயே புலம்பல்கள் வரத் துவங்கியிருக்கின்றன. 

சரி.. எப்படி இருந்தாலும் படக்குழு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை என இணையத்தில் அடுத்த பக்கத்தைப் புரட்டினால் இந்த விவாதம் குறித்து தனபால் மனம் திறந்திருக்கிறார்.

அதிரடியாக அவர் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். கூட்டம் கூட்டமாகத் தொண்டர்களுடன் தி.மு.க.வின் அமைச்சர்களும் கொண்டாடிப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்  அப்படி என்ன சொன்னார் அவர்? “உதயநிதிக்கு நன்றி. இது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி”!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com