’அயோத்தி’ கதை திருடப்பட்டதா? பரபரப்பு!

சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
’அயோத்தி’ கதை திருடப்பட்டதா? பரபரப்பு!

சசிகுமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது அயோத்தி திரைப்படம். வெற்றிகரமான இந்தப் படத்தின் கதை திருடப்பட்டவொன்று என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து, பெரும் விவாதமாகியுள்ளன.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’.

அயோத்தியிலிருந்து  இராமேஸ்வரம் வருகிற வடநாட்டு குடும்பத்தினரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - எஸ்.ராமகிருஷ்ணன் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால்,  இந்தக் கதை தான் எழுதிய கதை என்றும் திருடப்பட்டு, படமாக்கப்பட்டிருப்பதாகவும்  முகநூலில் எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் விவாதித்து இப்படத்தின் திரைக்கதையைத் தாம் எழுதியதாக இயக்குநர் மந்திரமூர்த்தி தெரிவித்திருந்தார்.

ஆனால், எழுத்தாளர் மாதவராஜ் தன் முகநூல் பக்கத்தில், “அயோத்தி படத்தில் இராமேஸ்வரம் வந்து, கார் விபத்தில் பாதிக்கப்பட்ட வட நாட்டு குடும்பத்திற்கு உதவுவதாக சசிகுமாரும் அவரது நண்பரும் நடித்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தில் சுரேஷ் பாபு, சாமுவேல் ஜோதிக்குமார் ஆகியோர்தான் உதவினர். இதுகுறித்து 2011 ஆம் ஆண்டு எழுதியிருக்கிறேன். ஆனால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இது தன்னுடைய கதை என்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார். 

சாமுவேல் ஜோதிக்குமார் - சுரேஷ் பாபு
சாமுவேல் ஜோதிக்குமார் - சுரேஷ் பாபு

மேலும் மற்றொரு பதிவில், “அயோத்தி படத்திற்கு முதலில் திரைக்கதை எழுதியவர் சங்கர் தாஸ். பிறகு வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ”இது எஸ்.ராமகிருஷ்ணனின் கதை” என இரண்டு பக்கக் கதையை இயக்குனர் மந்திரமூர்த்தி, இவரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொல்லி இருக்கிறார்.

அப்படி தன்னிடம் தரப்பட்ட எஸ்.ரா.வின் கதையை இன்று தன் முகநூல் பக்கத்தில் சங்கர்தாஸ் வெளியிட்டு இருக்கிறார். 

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளர் செய்கிற காரியமா இது? 2011-ல் நான் எழுதியதை 2022-ல் அப்படியே ஈயடிச்சான் மாதிரியா காப்பியடித்து இருப்பார்?

இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் மக்களே! 

சட்டென்று பிடிபட்ட ஒரே மாதிரியான எழுத்துகளை இங்கு பகிர்கிறேன்.

*****

லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர். நேரடி விமானம் இல்லை என்கிறார்கள். பெராமவுண்ட், கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர் (எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது).

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது எனக் கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர் (மாதவராஜ் எழுதியது).

------------

அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்.. "மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும். இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது" என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட், பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள்... அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது (எஸ்.ரா எழுதியது).

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது (மாதவராஜ் எழுதியது).

----------

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது. அங்கு சென்று விசாரிக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும். கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான் (எஸ்.ரா. எழுதியது).

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீ.க்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார் (மாதவராஜ் எழுதியது).

------------

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கிக்கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா. எழுதியது).

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர் (மாதவராஜ் எழுதியது).

-----------

தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார் (எஸ்.ரா எழுதியது).

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னாலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார் (மாதவராஜ் எழுதியது).

------

நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும். நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார்? (எஸ் ரா எழுதியது).

“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும்? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” (மாதவராஜ் எழுதியது).

----

உண்மைச் சம்பவத்தில் உதவியவர்களின் பெயர்கள் இப்படத்தின் மூலம் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என மாதவராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனோ இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ராமகிருஷ்ணன் - மாதவராஜ் 
நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ராமகிருஷ்ணன் - மாதவராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com