
நடிகர் விக்ரமுக்கு விலா எழும்பு முறிவு ஏற்பட்டதால் சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனனும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விக்ரமின் பிறந்தநாளன்று வெளியான படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
அதேபோல், கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் விக்ரமின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒத்திகையின்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதாகவும், விலா எலும்பு முறிந்துள்ளதால் சிறிது காலம் அவரால் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்றும் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் இருந்து பொன்னியின் செல்வன் மற்றும் ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த வியக்க வைக்கும் வரவேற்புக்கு விக்ரம் தனது நன்றிகளை பகிர்ந்துள்ளதாகவும் அவரது மேலாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனால், தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...