தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் புதிதாக ஒளிபரப்பான தொடர் முதல் 5 தொடர்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் சிங்கப் பெண்ணே தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பிண்ணனியை மையமாக வைத்து தொடர் எடுக்கப்படுகிறது. (எல்லா தொடர்களும் ஆரம்பத்தில் கிராமத்தில் தொடங்கினாலும், பின்னர் நகரத்து பின்னணியிலேயே ஒளிபரப்பாகின்றன.)
இந்தத் தொடரை இயக்குநர் தனுஷ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு வெற்றிகரமாக ஓடிய கண்ணான கண்ணே தொடரை இயக்கியவர்.
இந்தத் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சிங்கப்பெண்ணே தொடர் டிஆர்பி பட்டியலில் 9.62 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்களின் பட்டியலில் சிங்கப்பெண்ணே தொடர் இணைந்துள்ளது. சிங்கப்பெண்ணே தொடர் டிஆர்பி பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தொடர் ஒளிபரப்பான ஒரு மாதத்துக்குள் இத்தகைய முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், இந்தத் தொடரின் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது.