தீபாவளியைக் கைப்பற்றியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்? திரை விமர்சனம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 
தீபாவளியைக் கைப்பற்றியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்? திரை விமர்சனம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 

அதிகாரத்தின் கோரப் பற்களால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் துயரங்களைப் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 

கருப்பாக இருந்தாலும் கதாநாயகனாகலாம் எனும் ஆசையின் ஊடே தனக்கான இயக்குநரை தேடுகிறார் மதுரையின் ரெளடியாக வரும் சீசர் (ராகவா லாரன்ஸ்). அவரைக் கொலை செய்யும் காவல்துறையின் திட்டத்துடன் சத்யஜித் ரேவின் இணை இயக்குநர் எனும் முகமூடியுடன் படம் இயக்குவதாக அவரிடம் வந்து சேர்கிறார் கிருபா ( எஸ்.ஜே.சூர்யா). துப்பாக்கி சகிதம் வாழும் லாரன்ஸும், கேமரா கையுமாக வலம்வரும் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து பயணிக்கின்றனர். லாரன்ஸைக் கொலை செய்ய காவல்துறை முனைவது ஏன்? அவர் கொல்லப்பட்டாரா? சூர்யா எடுக்கும் படம் என்ன ஆனது? என்பதுதான் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்ஸின் கதை. 

தீபாவளிக்கு ஏற்ற கமர்ஷியல் பேக்கேஜுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அரசியல் பின்னணியுடன் கூடிய விறுவிறுப்பான கதையைக் கொடுத்து மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கமர்ஷியல் சினிமா என்றவுடன் வரும் வழக்கமான காட்சிகளை மட்டும் மனதில் கொள்ளாமல் அதில் ஏதாவது ஒரு சமூக சிக்கலைக் காட்சிப்படுத்த முயற்சித்து அதை சரியாகக் கொடுத்திருக்கிறார். 

70களின் காலங்களைக் கண்முன் கொண்டு வந்தது முதல் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட அக்கால ரெபரன்ஷ்கள் வரை படம் ரசிக்கும்படி வந்திருக்கிறது. ராகவா லாரன்ஸ் என்றவுடன் தோன்றும் வழக்கமான அவரது உடல்பாவனைகளும், வசனங்களையும் தாண்டி மிடுக்கான, திமிரான அவரது நடிப்பு திரையில் நன்றாக எடுபட்டிருக்கிறது. கிளிண்ட் ஈஸ்ட்வுடின் ரசிகராக அவர் நடித்திருக்கும் காட்சிகள் தொடங்கி பழங்குடிகளின் நிலத்திற்காக போராடுவது வரை காட்சியின் வீரியத்தைப் புரிந்து நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்தை நினைவுபடுத்துகிறார்.

மறுபுறம் எஸ்.ஜே.சூர்யா. அவரது நடிப்பிற்கு மதிப்பெண் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? முந்தைய திரைப்படங்களில் தரமாக தனது நடிப்பை நிகழ்த்திக் காட்டியிருந்தாலும் அவற்றிலிருந்து விலகி சற்று வித்தியாசமாக நடித்து ரசிகர்களைக் கவருகிறார். ஒருபுறம் லாரன்ஸைப் பார்த்து பயப்படுவதும், மறுபுறம் அப்படியே மாறி அவர் முன் தைரியமாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இவர்களுடன் நடித்திருக்கும் நிமிஷா ஷஜயன் நமது பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். கடுகடுப்பான பழங்குடி பெண்ணாக வரும் அவர் அதை சரியாக திரையில் கடத்தியிருக்கிறார். இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், அரவிந்த் ஆகாஷ், டாம் சாக்கோ என நீளும் பட்டாளம் படத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.

70களில் நடக்கும் கதைக்களம் என்பதால் அதற்கேற்ற உழைப்பை சரியாகக் கொடுத்ததற்காக கலை இயக்குநர் சந்தானத்தைப் பாராட்டலாம். நேர்த்தியான அவரது உழைப்பு படத்தை இன்னும் நெருக்கமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதேபோல் காட்டையும், அதன் மக்களையுமாக அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. 

எஸ்.ஜே.சூர்யாவும், லாரன்ஸும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் படத்தைக் கைதூக்கிவிட்டிருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற யானைக் காட்சிகள் ஒரு ரம்மியமான உணர்வை ரசிகர்களுக்குக் கொடுக்கும். சின்னச் சின்ன பிழைகள் இருந்தாலும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பலன் கொடுத்திருக்கின்றன. 

ரெட்ரோ காட்சிகளில் வரும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாக இருந்தாலும் அதை பின்னர் சரி செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். மாமதுரை பாடல் திரையரங்கக் கொண்டாட்டம். 

முதல்பாதி கதைக்கும் இரண்டாம் பாதி கதைக்கும் கயிறு கட்டியிருக்கிறார் இயக்குநர். ஒரு கதையைப் பின் தொடரும்போது அதிலிருந்து வெளியில் வந்து இரண்டாம் பாதியில் வேறொரு கதைக்குள் நுழைவதாக தோன்றும் காட்சிகள் குழப்பத்தைக் கொடுக்கிறது. இழுவையான முதல்பாதி ரசிகர்களின் பொறுமைக்கு சவால் விடலாம். இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் காட்சிகள் ஒருகட்டத்தில் எப்போது முடியும் எனும் மனநிலையை ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டாக வேண்டும். படத்தின் அதிகப்படியான நீளம் பலவீனம்.

பழங்குடியினர் பிரச்னை, அவர்களுக்கான தீர்வு, அதில் நடக்கும் அரசியல் அதிகாரப் போட்டி, படத்தில் ஆங்காங்கே காட்டப்படும் அரசியல் தலைவர்களின் ரெபரன்ஸ்கள், கிளைமேக்ஸ் காட்சிகள் ஆகியவை படத்தைக் காப்பாற்ற உதவியிருக்கின்றன.   ஜிகர்தண்டா முதல் பாகத்தின் ரெபரன்ஸ்களும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

நீளத்தைக் குறைத்து தேவையானவற்றை மட்டும் தெளிவாகப் பேசியிருந்தால் ஜிகர்தண்டா இன்னும் சுவை கூடியிருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com