அமீர் நன்றாக திருடுவார்..! சர்ச்சையாகும் ஞானவேல் ராஜா பேட்டி!

இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நேர்காணல் சர்ச்சையாகி வருகிறது.
அமீர் நன்றாக திருடுவார்..! சர்ச்சையாகும் ஞானவேல் ராஜா பேட்டி!

நடிகர் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குநர்கள் அழைப்பட்டிருந்தனர். ஆனால், கார்த்தியின் முதல் படத்தை இயக்கிய அமீர் ஏன் அழைக்கப்படவில்லை என கேள்விகள் எழுந்தன. பருத்திவீரன் படத்தின்போது அமீருக்கும் கார்த்திக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என சினிமா வட்டாரத்தினர் பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தனர்.

ஆனால், இயக்குநரும் நடிகருமான அமீர், சில நாள்களுக்கு முன் நேர்காணல் ஒன்றை அளித்தார். அதில்,  “கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும் முறையாக அழைக்கவில்லை. மூன்றாம் நபரை விட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால், வரக் கூடிய ஆள் நான் இல்லை. சம்பந்தப்பட்டவர் என்னை அழைக்கவில்லை. அதைவிட, பருத்திவீரன் படத்தால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலும் பொருளாதார ரீதியாக இழப்பும் ஏற்பட்டது. இதற்காக, பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?” எனக் குறிப்பிட்டார். 

அமீரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தன் தரப்பு நியாயங்களைப் பேசியுள்ளார்.

அதில், “அமீர் எங்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வருகிறார். ஆனால், ராம் படத்தை இயக்கி வெளியிட்ட பின் அமீர் ரூ.58 லட்சம் கடனில் இருந்தார். நான் பல இடங்களில் பணத்தைப் பெற்று அவருக்குக் கொடுத்து உதவினேன். அதற்காக நடிகர் கார்த்தியை, என் தயாரிப்பில் இயக்க முன்வந்தார். பருத்திவீரன் படம் அப்படித்தான் ஆரம்பித்தது. அறிவிப்பு போஸ்டர் வெளியானபோது இருந்த அமீர் படப்பிடிப்புக்கு போனதும் முற்றிலும் மாறிவிட்டார். தன் இஷ்டத்துக்கு நடந்துகொள்வது, மரியாதையாக நடக்காதது என பல வகையில் நான் பாதிக்கப்பட்டேன். பருத்திவீரன் படத்தில் தொடர்புடைய ஆள் நானும் கார்த்தியும்தான். ஆனால், என் மீது மட்டுமல்லாமல் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அமீர் அண்ணன் எங்களைத் திருடர்கள் என்கிறார். எனக்கு பட வாய்ப்பு தர நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதையும் படிக்க: 38 மொழிகளில் கங்குவா!

சூர்யா, கார்த்தி ஆகியோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அமீருக்கு யார் இந்த வாய்ப்பைக் கொடுப்பார்கள்? ரூ.2.75 கோடி பட்ஜெட்டில் 6 மாத காலத்தில் பருத்திவீரன் படத்தை முடித்துக்கொடுப்பதாகக் கூறினார். ஆனால், 2.5 ஆண்டுகள் கழித்து ரூ.4.40 கோடியில்தான் படத்தை முடித்தார். தயாரிப்பாளர் சங்கத்தினர் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பு செலவு குறித்த கணக்கைக் கேட்டனர். அதில், 250 பன்னிகளை பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டு அதில் 75 பன்னிகள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் அமீர். ஆனால், உண்மையில் கிளைமேக்ஸ் காட்சியில் 35 பன்னிகள்தான் இடம்பெற்றிருந்தன. போலி கணக்குகளை எழுதி அமீர் நன்றாகத் திருடுவார். ஆர்யாவை வைத்து அவர் இயக்க இருந்த ‘சந்தனத் தேவன்’ படத்தின் தயாரிப்பாளரிடமும் அமீர் ரூ.7 கோடியை ஏமாற்றியுள்ளார். அந்த தயாரிப்பாளர் அமீரை ‘ஃபிராடு’ என்றே கூறி வருகிறார். என் பணத்தில்தான் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பதையே அமீர் கற்றுக்கொண்டார். அந்த அளவிற்கு பருத்துவீரனில் என்னை ஏமாற்றினார். அவரைப் பொறுத்துவரை உழைத்து சம்பாதிக்கக் கூடாது. யாராவது சிக்கினால் அவர்களிடம் திருட வேண்டும்.” எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com