பருத்தி வீரனுக்காக அமீர், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்திருப்பார்: இயக்குநர் சந்திரா தங்கராஜ்

எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் பருத்திவீரன் படப்பிடிப்பு குறித்தும் அமீரின் உழைப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார்.  
பருத்தி வீரனுக்காக அமீர், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்திருப்பார்: இயக்குநர் சந்திரா தங்கராஜ்

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான சந்திரா தங்கராஜ் ‘கள்ளன்’ எனும் படத்தினை இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் அமீர், ராம் இருவரிடமும்  பல்வேறு படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

தொடர்ந்து, அமீருக்கு இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி  உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் சந்திரா தங்கராஜ் தனது பேஸ்புக் பதிவில் கூறியதாவது: 

கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள் பேசும் பொருளாகி இருக்கின்றன. 

இயக்குனர் அமீர் என்னுடைய குரு. அவரோடு உதவி இயக்குனராக ராம், பருத்தி வீரன் மற்றும் அவர் தயாரித்து நடித்த யோகி  படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறேன். அமீர்  என்னுடைய ஆசான் என்பதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. "ராம்" திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தே அவரைப் பார்த்து வியந்து கொண்டிருந்தேன். எதைச் சொல்லப்போகிறோம் என்பதில் அவருக்கு கொஞ்சமும் தயக்கம் இருந்ததில்லை..  

என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் வேண்டும் நடிப்பை வாங்குவதற்காகவும் தொழில்நுட்ப நேர்த்திக்காக மட்டுமே படப்பிடிப்பு நாள்களின் எண்ணிக்கை கூடும். அவ்வளவுதான் டாட். மற்றபடி அவரின் சினிமா அறிவைப் பற்றி பேச ஒரு இது வேண்டும். கிட்டத்தட்ட அவர் ஒரு சுயம்பு . தவிர அவர் ஒரு கிரியேட்டர், புதிதாக  ஒன்றை உருவாக்குபவர். அதனால்தான் இன்று வரை பருத்திவீரனின் உருவாக்கத்தை யாராலும் முறியடிக்க முடியவில்லை.. அதில் என்னுடைய இயக்குனர் அமீரின் கடும் உழைப்பு மட்டுமே பெரும் மூலதனம்.

அப்படி புதிதான ஒன்றாக உருவாக்கபட்டதுதான் பருத்தி வீரன். அவர்   பருத்தி வீரனை உருவாக்கிய விதத்தை  பார்த்து நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவே வியந்துதான் பார்த்துக்கொண்டிருந்தது. நாம் ஒரு சிறப்பான படத்தில் வேலை செய்கிறோம் என்ற தெளிவு  படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் இருந்தது. அதற்காகவே இயக்குனர் சொல்வதை  மறுபேச்சின்றி   செய்து கொண்டிருந்தோம். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் சொல்லியதைதான்  செய்தார்கள். 

பருத்திவீரன் படப்பிடிப்பில்... 
பருத்திவீரன் படப்பிடிப்பில்... 

பருத்தி வீரன் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு  குறைந்தது அவர் இருபது மணி நேரம் வேலை செய்திருப்பார். அவர் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து படத்தை இயக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் தன் உடலை மனதை நடிப்புக்கு கொண்டு வந்தே நடிகர்களை இயக்கினார். ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொரு டேக்கிலும்  நடிகர்களுக்கு விளக்கிக்கொண்டே இருந்தார். நடித்து காட்டிக் கொண்டே இருந்தார். உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே. படப்பிடிப்பு முடிந்த பின் ஹோட்டல் அறைக்கு திரும்பியதும், மறுபடியும் அடுத்த நாள் காட்சிகளை நடிகர்களுக்கு விளக்குவது . உதவி இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்களோடு  அடுத்த நாள் திட்டத்தை பேசுவது  என்று எப்போதும் உழைத்துக்  கொண்டே இருந்தார்..  

இவ்வளவு உழைப்புக்கு மத்தியில் இன்று படப்பிடிப்பு  நடக்குமா? இல்லையா? என்று ஒவ்வொரு நாளும் பணப்பற்றாக்குறையில் பெரும் போராட்டத்தை சந்திப்பார். பருத்தி வீரன் படப்பிடிப்பில் வேலை செய்த யாரை கேட்டாலும் அதை சொல்வார்கள். 

ஒரு பேட்டியை கொடுத்து ஞானவேல் ராஜா , இயக்குநர் அமீரின் உழைப்பை, அவரின் லேகசியை உதாசீனப்படுத்தும்போது கடுங்கோபம் வருகிறது எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com