ரசிகர்களைக் கட்டிப்போடும் பார்க்கிங்: திரை விமர்சனம்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். 
ரசிகர்களைக் கட்டிப்போடும் பார்க்கிங்: திரை விமர்சனம்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். 

பொதுவாக எளிமையான கதைக்களத்தைக் கொண்டு சிறப்பான திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவரும். அப்படி ஒரு கதையை திரைப்படமாக்கி தமிழிலும் வெற்றி பெறமுடியும் என காட்டியிருக்கிறது பார்க்கிங். 

வாடகை வீட்டில் தனது காரை நிறுத்துவதற்கு கதாநாயகன் சந்திக்கும் பிரச்னையே பார்க்கிங் திரைப்படத்தின் கதை. மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஹரிஸ் கல்யாண் தனது மனைவியுடன் புதிதாக ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார்.  அங்கு ஏற்கெனவே தனது குடும்பத்தினருடன் குடியிருக்கிறார் அரசு ஊழியரான  எம்.எஸ்.பாஸ்கர். தொடக்கத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையில் சுமூகமான உறவு நிலவும் நிலையில் தனது மனைவிக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண். இங்கு தொடங்குகிறது பிரச்னை. ஹரிஸ் கல்யாணின் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்படும் எம்.எஸ்.பாஸ்கர் அதனால் எரிச்சல்படுகிறார். அந்த எரிச்சல் இருவருக்குமிடையேயான மோதலாக வெடிக்கிறது. பார்க்கிங் பிரச்னை தீர்ந்ததா இல்லையா? ஒருவருக்கொருவர் அகம்பாவத்தில் செய்த காரியங்கள் அவர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே பார்க்கிங் திரைப்படத்தின் கதை. 

சாக்‌ஷி தோனி தயாரிப்பில் நடித்த எல்ஜிஎம் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹரிஸ் கல்யாண். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இளைஞனாக வருவதிலிருந்து கோபத்தில் வயதானவரைத் தாக்குவது வரை தேர்ந்த நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். மனைவி இந்துஜாவிடம் கோபப்படும் இடங்களிலும், பழிவாங்குவதற்காக எம்.எஸ்.பாஸ்கரை பிரச்னையில் மாட்டிவிடுவதிலும் தனிப்பட்ட பகையை தனது நடிப்பில் அப்படியே கடத்தியிருக்கிறார் ஹரிஸ். வாழ்த்துகள்.

படத்தின் பெரிய பலம் என்றால் அது எம்.எஸ்.பாஸ்கர்தான். அவரது அனுபவத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து மலைக்க வைத்திருக்கிறார். இளைஞனிடம் சரிக்கு சமமாக மல்லுக்கட்டுவதில் தொடங்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் செய்யும் காரியங்கள் மிரள வைக்கின்றன. தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து முகபாவனைகளால் பார்வையாளர்களை கட்டிப் போட்டிருக்கிறார்.  அவரை அதிகம் தமிழ் சினிமா கவனிக்காமல் விட்டுவிட்டதோ எனும் வருத்தம் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

இவர்களுடன் நடித்துள்ள நடிகர்கள் இந்துஜா, ரமா ராஜேந்திரா, ப்ராதனா நாதன், இளங்கோ, இளவரசு என பலரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். தன்னுடைய கணவர் தனக்கு சட்னி அரைக்கு மிக்ஸி வாங்கிக் கொடுக்கவில்லை என ரமா கோபப்படும் இடங்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும் இல்லறப் பெண்களின் வருத்தங்களைப் பதிவு செய்திருக்கிறது. தந்தை மீது கோபம் கொள்ளும் ப்ராதனா நாதனும், கணவன் மீது வருத்தப்படும் இந்துஜாவும் கவனிக்க வைக்கின்றனர். 

கதைமாந்தர்களை நிலைநிறுத்தியது, கதையை பார்வையாளர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லியது, விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு ஆகியவற்றால் முதல் படத்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார். ஹரிஸ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் பலம். 

அதேசமயம் சில தொய்வான இடங்களும், முன்கணிக்கக்கூடிய காட்சிகளும் படத்தின் மீதான ஆர்வத்தை குறைக்கச் செய்யலாம். என்னதான் கோபம் இருந்தாலும் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்வது எல்லைதாண்டி செல்வது எல்லாம் ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன. கிளைமேக்ஸ் காட்சியை எளிதில் கணிக்கக்கூடியதாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். 

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும், ஜிஜு சன்னியின் கேமராவும் நன்றாக பலனளித்திருக்கின்றன. ஒரு வீடு, அரசு அலுவலகம், தனியார் மென்பொருள் நிறுவனம் எனும் சின்ன படப்பிடிப்பு இடங்களை பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்கும்வண்ணம் காட்சிப்படுத்தி வென்றிருக்கிறது ஜிஜு சன்னியின் கேமரா. 

எளிமையான ஒரு கதையை இவ்வளவு விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்கச் செய்து வென்றிருக்கிறது ராம்குமாரின் பார்க்கிங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com