
தமிழில் ஒரு மலையாள சினிமா: நூடுல்ஸ் திரைவிமர்சனம்
சிறிய திரைப்படங்களை நம்பி தயாரிப்பதும், அதனை மக்களிடம் கொண்டு செல்வதும் இன்றைக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது. அப்படி ஒரு சிக்கலுக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் நூடுல்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது?
தமிழின் பல படங்களை தனது வில்லத்தனமான கதாபாத்திரத்தால் ரசிக்க வைத்த நடிகர் மதன் தட்சிணாமூர்த்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் நூடுல்ஸ். காவல்துறை அதிகாரியுடனான மோதலில் இருக்கும் கதாநாயகனின் குடும்பம் எதிர்பாராத விதமாக கொலை சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தனர் என்பதே திரைப்படத்தின் கதை.
கதையைப் பொருத்தவரை ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அதை எப்படி திரையில் கடத்தியிருக்கின்றனர் என்கிற வகையில் வெற்றி பெற்றிருக்கிறது இத்திரைப்படம். காவல்துறை அதிகாரியாக மதனும், கதாநாயகனாக ஹரீஸ் உத்தமனும், கதாநாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்திருக்கின்றனர். அதிகப்படியான கதாபாத்திரங்களைத் திணிக்காமல் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் தேர்வு கதையை உள்வாங்கிக் கொள்ளவும், தேவையற்ற திசைதிருப்பல்களையும் தவிர்த்திருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் மதனும் சரி, உடற்பயிற்சி பயிற்றுநராக வரும் கதாநாயகன் ஹரீஸ் உத்தமனும் சரி, காட்சிக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்தியிருக்கின்றனர். கோபத்தினால் இன்ஸ்பெக்டரிடம் எகிறும் இடங்களாகட்டும், கொலை சம்பவம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என அவரிடமே கெஞ்சும் இடங்களாகட்டும் படத்தை சுமந்திருக்கிறார் ஹரீஸ். சாதாரணமானவர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் காவல்துறையின் முகங்களை இம்மி பிசகாமல் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் மதன். அதேபோல் யாருக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அப்பாவித்தனமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகை ஷீலா ராஜ்குமார். இவர்களைத் தவிர அவசியம் குறிப்பிட்டாக வேண்டியவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர். இரண்டாம் பாதி முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மனிதர் நிரம்பி நிற்கிறார். இன்ஸ்பெக்டரைக் கண்டதும் நடுங்கும் அவரது உடல் பார்வையாளர்களை சிரிப்பால் குலுங்கச் செய்திருக்கிறது.
ஒரே இடத்தில் ஒட்டுமொத்த திரைப்படமும் நகர்வதால் ஒரு கட்டத்தில் இயல்பாகவே காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் விறுவிறுப்பான திரைக்கதையாலும், யதார்த்தமான கேமரா கண்களாலும் அத்தகைய அபாயத்தைத் தடுத்திருக்கிறது படக்குழு. தேவையற்ற பாடல்களைத் திணிக்காமல் அவசியமான இடங்களுக்கான பின்னணி இசை படத்திற்கு பலத்தை சேர்க்கின்றன. படத்தொகுப்பாளர் சரத், ஒளிப்பதிவாளர் விநோத் ராஜ் ஆகியோரின் கச்சிதமான பணி படத்தின் மீதான விறுவிறுப்பிற்கு உதவியிருக்கின்றன.
மொத்தம் 1 மணி 50 நிமிடங்கள் மட்டுமே ஓடும் திரைப்படம் அதற்குள் முடிந்துவிட்டதா எனும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தலாம். இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்போது முதல்பாதி சற்று மெதுவாக இருப்பது அயர்ச்சியைக் கொடுக்கலாம்.
பொதுவாக யதார்த்தமான சினிமா என மலையாளத் திரைப்படங்களைப் பாராட்டுகிறோம். தமிழில் வந்துள்ள நூடுல்ஸ் திரைப்படமும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. மிகக் குறைந்த செலவில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல் கொடுத்திருப்பது இனிவரும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கான நம்பிக்கை.
இயல்பான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு நம்பகமான படத்தைக் கொடுத்ததற்காக நூடுல்ஸை ருசித்துச் சுவைக்கலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...