நடிகா் மாரிமுத்து உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு

பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து
பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து
Published on
Updated on
1 min read

பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது, மாரிமுத்து திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், வருஷ நாடு அருகேயுள்ள பசுமலை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, ஆரம்ப காலங்களில் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இயக்குநா்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே.சூா்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியனாா். ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளாா். அதன் பிறகு நடிகராக முத்திரை பதித்தாா்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலா்’ படத்தில் நடித்திருந்தாா். யுத்தம் செய், கொம்பன் உள்ளிட்ட 50 படங்களில் அவா் நடித்துள்ளாா்.

மாரிமுத்துவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைத் துறை பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

மாரிமுத்துவின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான பசுமலையில் சனிக்கிழமை (செப்.9) நடைபெறவுள்ளது.

முதல்வா் இரங்கல்: நடிகா் மாரிமுத்து மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தேனி மாவட்டத்திலிருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டு உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநராக உருவெடுத்தவா் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதாா்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவா். சின்னத் திரையிலும் நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ் பெற்றாா்.

பல நோ்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணா்வை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், திரைத் துறை நண்பா்கள், ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

இதேபோல கி.வீரமணி (திக), ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்), விஜயகாந்த் (தேமுதிக), சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்), தொல்.திருமாவளவன் (விசிக),

டிடிவி தினகரன் (அமமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவா்கள் மற்றும் ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிகா் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com