
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகள் மீராவின் உடலுக்கு திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் இல்லத்தில், அவரது மூத்த மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை பகுதியில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மகள் மீரா (16), சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள் இரவு மீரா, தனது படுக்கையறைக்கு தூங்குவதற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை அதிகாலை தந்தை விஜய் ஆண்டனி, மகளைப் பார்க்க படுக்கையறைக்கு சென்றார்.
அப்போது அங்கு மீரா, துப்பட்டாவால் ஃபேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த பணியாளர்கள் உதவியுடன் மீராவை மீட்டு, காரின் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் மீராவை பரிசோதனை செய்தனர். இதில், மீரா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் காவல்துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து வந்து மீரா உடலைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில் மீரா மன அழுத்தத்தில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை சம்பவம் தமிழக திரைத்துறையினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் மீராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.