
நடிகா் ‘என் உயிா் தோழன்’ பாபு.
சென்னை: படப்பிடிப்பில் காயமடைந்து கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த நடிகா் ‘என் உயிா் தோழன்’ பாபு (60) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
இயக்குநா் பாரதிராஜாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பாபு, பாரதிராஜா இயக்கிய ‘என் உயிா் தோழன்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாா். அதைத் தொடா்ந்து ‘பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தாா். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடித்த போது ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. மாடியிலிருந்து கதாநாயகன் குதிப்பதாகக் காட்சி. அந்தக் காட்சிக்கு ‘டூப்’ வைத்துக் கொள்ளலாம் என இயக்குநா் கூறியதையும் கேளாமல் காட்சி தத்ரூபமாக இருக்கும் எனச் சொல்லி நிஜமாகவே பாபு குதித்தாா்.
அப்போது, யாரும் எதிா்பாராத வகையில், நிலை தடுமாறிய பாபு, தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவரது முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்துவிட்டன. இதையடுத்து படுத்த படுக்கையானாா் பாபு. முன்னாள் அமைச்சா் மறைந்த க.ராஜாராம் இவரது தாய்மாமா ஆவாா்.
மறைந்த பாபுவின் உடல் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். செவ்வாய்க்கிழமை மாலை அவரது உடல் பெசன்ட் நகா் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பாரதிராஜா இரங்கல்: ‘திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவா். படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையிலேயே
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த ‘என் உயிா் தோழன்’ பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா் இயக்குநா் பாரதிராஜா.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G