
மலையாள சினிமாவின் பிரபல திரைப்பட விருதான வனிதா சினிமா விருது விழா நிகழ்ச்சி நேற்று (ஏப்.22) நடைபெற்றது. இதில், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், தனுஷ், ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் பகுதியாகக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில், ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளின் நடனங்கள் இடம்பெற்றன.
எதிர்பாராத விதமாக, நடிகர் மோகன்லாலும் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் இடம்பெற்ற, ‘ஜிந்தா பந்தா’ பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த விடியோவைக் கண்ட நடிகர் ஷாருக்கான் அதைப் பகிர்ந்து, “இப்பாடலை மிகச் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் செய்த பங்களிப்பில் பாதியையாவது நான் செய்திருப்பேன் என நம்புகிறேன். பிரியங்கள் சார். உங்களுடன் இரவுணவை உண்ணக் காத்திருக்கிறேன். நீங்கள்தான் உண்மையான ஜிந்தா பந்தா!” என நெகிழ்ச்சியாகத் தன் கருத்தைப் பகிர்ந்தார்.
அதற்கு நடிகர் மோகன்லால், “ உங்களைத் தவிர வேறு யாராலும் இதைச் சரியாகச் செய்ய முடியாது. உங்கள் ஸ்டைலில் நீங்கள்தான் உண்மையான கேங்க்ஸ்டர் (OG - ORIGINAL GANGSTER) ஜிந்தா பந்தா . உங்களின் கனிவான வார்த்தைக்கு நன்றி. பிறகு, வெறும் இரவுணவுதானா? காலை உணவுக்குப் பின்பும் நாம் ஜிந்தா பந்தாவைத் தொடர்வோம்” என உற்சாகமாகப் பதிலளித்துள்ளார்.
வனிதா விருது விழாவில் சிறந்த நடிகராக ஃபகத் ஃபாசிலும் நடிகர் தனுஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரபலமான நடிகர் விருது நடிகர் துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டது.