
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் கோட் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காரணம், இதுவரை கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில், விசில் போடு பாடலை விஜய்யே பாடியிருந்தார். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் பூர்த்தி செய்யாததால் இது வெளியானபோது தங்களின் அதிர்ச்சியை பதிவு செய்தனர்.
அதன்பின், ‘சின்னச் சின்ன கண்கள்’ பாடல் வெளியானது. இதையும் விஜய் பாடியிருந்தார். ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இப்பாடல் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் அழகாகப் பயன்படுத்தியிருந்தனர்.
ஆனால், படத்தின் மூன்றாவது பாடலான ’ஸ்பார்க்’ வெளியாகி கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. பாடலுடன் டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யின் தோற்றமும் பெரிதாகக் கவரவில்லைபோல. முக்கியமாக, யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும் இயக்குநரை தகாத வார்த்தைகளிலும் விஜய் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். சிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்ததாகத் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் பாடல்கள் மிக முக்கியமான பங்களிப்பை அளிப்பவை. ஆனால், கோட் திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.