இதமான கதை சொல்லும் மின்மினி! - திரை விமர்சனம்

இதமான கதை சொல்லும் மின்மினி! - திரை விமர்சனம்
Published on
Updated on
2 min read

சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹலிதா ஷமீம்மின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மின்மினி! இயக்குநர் பெயரை நம்பி கண்டிப்பாக படத்திற்குப் போகலாம் என்ற நம்பிக்கையை தனது படங்கள் மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள ஹலிதா ஷமீம், மினிமினியில் என்ன கொடுத்துள்ளார்?

முதலில் இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, ஏஐ அற்ற டீ-ஏஜிங் முயற்சி. அதாவது படத்தில் கதாப்பாத்திரங்களின் முதிர்ச்சியைக் காண்பிக்க, அல்லது இளமையைக் காண்பிக்க 8 வருடங்கள் காத்திருந்து படமாக்கியிருக்கிறார்கள்! குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம், வேலைக்கு போகும் வயது என மூன்று காலகட்டங்களைப் படமாக்க 8 வருடங்கள் பொறுத்திருந்து உருவாக்கியுள்ளனர். அந்த முயற்சி படத்தில் அழகாக இருக்கிறது. அந்த புதிய முயற்சிக்காக இயக்குநருக்கும், படக்குழுவுக்கும் பாராட்டுகள்.

மின்மினி ஒரு கேரக்டர் டிரிவன் கதை போலத்தான் எழுதப்பட்டுள்ளது. பள்ளியில் முறைத்துக்கொண்டு சுற்றும் இரண்டு சிறுவர்கள், ஆளுக்கொரு கனவைச் சுமக்கிறார்கள். ஒருவருக்கு இமயமலைப் பகுதிக்கு பைக்கில் செல்ல வேண்டும், மற்றொருவருக்கு ஓவியக் கலைஞன் ஆக வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. இருவருக்கும் நடுவே உள்ள குட்டி பகை மறைந்து, நண்பர்களாக மாற ஆரம்பிக்கும் தருணத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதில் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் அவர்களின் கனவுகள் என்ன ஆனது என்பதே ஸ்பாய்லர் இல்லாத கதைச்சுருக்கம் எனலாம்.

இதுபோன்ற எந்த பதட்டமும், வன்முறையும், வஞ்சகமும், ரத்தமும் இல்லாத அழகான படங்கள் வருவது அரிதாகிவிட்டது. இந்த அழகான கதைக்களத்தை முடிந்த அளவுக்கு நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஹலிதா. பள்ளியில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை திரையில் காட்ட மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எதுவும் இல்லாவிட்டாலும் சலிப்பில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் மனிதர்களையெல்லாம் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் (ஒரு டெண்ட் பையனைத் தவிர). 

இரவு நேரத்தில் இமயமலைப் பகுதியில் முன்பின் தெரியாத ஒரு நபரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண், வேறொரு அடையாளம் தெரியாத நபரின் உதவியை நம்பி ஏற்றுக்கொள்வதும், அந்த நபர் அவளை பத்திரமாக கூட்டிச் செல்வதும் எல்லா படங்களிலும் பார்க்க முடியாத ஒன்று. அப்படியே வந்தாலும், கிரிஞ் வசனங்களால், அந்தக் காட்சி வலுவிழந்துவிடும். அதேபோல் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக ஒரு இடத்தில் தங்கும் காட்சிகள் எந்தவித ரொமான்ஸும் இல்லாமல் கண்ணியமாக காட்டியது பாராட்டுதலுக்குரியது. கண்ணியம் என்ற சொல்லை அடிக்கடி அடிக்கோடிட்டு காட்டுவதுபோன்ற வேலைகள் எதுவும் செய்யாமல் இயல்பாக காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களைத் தன் எழுத்துக்களால் மிகையில்லாமல் காட்சியாக்கி அதில் வெற்றி கண்டுள்ளார் ஹலிதா. 

முக்கிய கதாப்பத்திரங்களாக தோன்றும் மூன்றுபேரும் திரைக்கு அறிமுகம் என்றாலும், நடிப்புக்கு அறிமுகமில்லை எனத் தெரிகிறது. எனினும் சில இடங்களில் உரையாடல்கள் செயற்கைத் தன்மையுடன் இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சில கதாப்பாதிரங்கள், காட்சிகள் எதார்த்தமானதாக இல்லாதது சிறிய ஏமாற்றம் எனலாம், ஆனால் அது கதையைத் தொந்தரவு செய்யவில்லை. 

கத்திஜா ரகுமானின் இசை, படத்திற்கும் பார்வையாளர்களுக்கு இதமளிக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் அழகாக பொருந்தி கதைக்கு பலம் சேர்க்கின்றன. இமாச்சல் பகுதிகளை மனோஜ் பரஹம்சா, அபினந்தன், ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு அழகாக காட்டியுள்ளது. அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி திரையில் கொண்டுவந்து சேர்த்துள்ளது அவர்களின் ஒளிப்பதிவு. 

படத்தின் முக்கிய கருவை டுவிஸ்ட்டாக கொண்டுவந்து சேர்த்திருக்கலாம் என்றபோதும், அதனை பதட்டமில்லாமல், பீல் குட் திரைக்கதையாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் எழுத்தாளர் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்த இதமளிக்கும் கதையை கண்டிப்பாக திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com