
ஹிப்ஹாப் இசைக்கலைஞரான ஹனுமன்கைண்ட் உலகளவில் கவனம் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் ராப் இசைக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் ஆங்கில பாடல் வரிகளில் உருவாகும் இந்தப் பாடல்களைக் கேட்க இந்தியா போன்ற நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழிலும் ஆத்திச்சூடி, போர்க்களம் (ஆடுகளம்), உள்ளிட்டவை ராப் பாடல்களாக உருவானவையே. ஆனால், இவை அசல் ராப் பாடல்கள் எனச் சொல்ல முடியாது. ராப் இசையைத் தொடர்ந்து கேட்கும் ரசிகர்கள் இதிலுள்ள சிக்கல்களையும் கவனிப்பதால் சினிமாவில் உருவாகும் ராப் பாடல்கள் பெரிதாகக் கவனம் பெறுவதில்லை.
இவற்றில், சினிமாவைத் தாண்டி கேளிக்கை விடுதிகள், இசைக்கச்சேரிகளில் பாடும் சுயாதீன ராப் இசைக்கலைஞர்களும் உண்டு.
அப்படி, கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த சூரஜ் சேருகத் என்பவர் ஹனுமன்கைண்ட் (hanumankind) என்கிற பெயரில் ஹிப்ஹாப் பாடகராக இருக்கிறார். இவரே எழுதி, இசையமைத்து, பாடி ஆல்பங்களை வெளியிடுவார். யூடியூயில் இவரது பாடல்களைப் பலரும் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹனுமன்கைண்ட் தன் புதிய ஆல்பமான பிக் டாக்ஸ் (big dawgs) என்கிற பாடலை வெளியிட்டுள்ளார். இவரே எழுதி, இசையமைத்து, பாடி, நடனமாடியுள்ள இப்பாடல் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவான இப்பாடல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்களைப் பெரிதாக ஈர்த்திருக்கிறது.
ஜூலை 10 ஆம் தேதி யூடியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரை 3.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 96 ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டுள்ளனர். பல நாடுகளிலிருந்து, ‘இந்தியாவிலிருந்து இப்படி ஒரு பாடகரா?’ என்றும் ‘இந்தாண்டில் நான் கேட்ட சிறந்த பாடல் இதுதான்’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா உள்பட பல பிரபலங்கள் ஆச்சரியத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.