இயக்குநர் நித்திலன் சாமிநாதன் - நடிகை நயன்தாரா கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல்.
குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். குறைந்த பட்ஜெட்டில் உருவான அப்படம், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் நல்ல படம் என்கிற பெயரையும் ஈட்டியது.
பின், 7 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இரண்டே படங்களில் பெரிய உச்சத்திற்கு சென்ற நித்திலன், அடுத்ததாக யாரை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நித்திலன் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, இக்கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளதாம். இதனை, பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு மகாராணி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.