
தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயன்றுகொண்டிருந்தபோது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை தனுஷ் வழங்கினார். இதில், சிவகார்த்திகேயன் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவில் கவனம் பெற்றன.
தொடர்ந்து, தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இப்படத்தில், நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றி கிடைத்தது.
தொடர்ந்து, நட்சத்திர நடிகரான பிறகும் சில நேர்காணல்களில் தனுஷ் தன்னை நம்பி எதிர்நீச்சல் படத்தை தயாரித்தது குறித்து பெருமையாகவே சிவகார்த்திகேயன் கூறிவந்தார்.
இந்த நிலையில், கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளராக அதன் டிரைலர் நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “கூழாங்கல் படத்தைப் பார்த்தபின் இயக்குநர் வினோத் ராஜின் அடுத்த படத்தை நான் தயாரிக்க விரும்பினேன். கொட்டுக்காளியாக உருவான இப்படம் பெரிய அங்கீகாரத்தைப் பெறும்.
இப்படம், வணிக வெற்றியைப் பெற்றால் இன்னும் நல்ல இயக்குநர்களை நான் அடையாளப்படுத்துவேன். நான்தான் இவர்களையெல்லாம் கண்டுபிடித்து வளர்த்து, வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன். பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர். ஆனால், நான் அந்த மாதிரி ஆள் இல்லை” என்றார்.
இதனைப் கேட்ட ரசிகர்கள், தனுஷ் உதவியதை மறந்துவிட்டு நன்றி இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசுகிறார் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் தனக்கு அளித்த வாய்ப்பை பெருமையாகப் பேசும் பழைய விடியோக்களைப் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
உண்மையில், சிவகார்த்திகேயன் யாரைக் குறிப்பிட்டு அப்படி பேசினார் எனத் தெரியாத சூழலிலும் தனுஷ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.