'பேய்கள் காக்கும் தங்கத்தைத் தேடி...' தங்கலான் - திரை விமர்சனம்

'பேய்கள் காக்கும் தங்கத்தைத் தேடி...' தங்கலான் - திரை விமர்சனம்
Updated on
2 min read

நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையைத் தொட்டுள்ள படம் தங்கலான். டிரெய்லரும் பாடல்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி, ரஞ்சித், விக்ரமின் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டின. நம்பிக்கையை காப்பாற்றினாரா ரஞ்சித்?

18ஆம் நூற்றாண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கட்டுக்கதையாக சொல்லப்படும் ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமான தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தங்கத்தை பேய்கள் பாதுகாப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த தங்கத்தை கண்டுபிடித்து சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர். அதே கட்டுக்கதைகளில் பேய்களை வீழ்த்தி தங்கத்தை எடுக்கத் திறமை வாய்ந்தவர்களாக சொல்லப்படும் குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அந்த பிரிட்டிஷ் அதிகாரி நாடுகிறார். கதைகளுக்கு பயப்படாமல் இவர்கள் தங்கத்தை வேட்டையாடினார்களா, அல்லது பேய்களுக்கு இரையானார்களா? அல்லது இது நிஜமாகவே கட்டுக்கதைதானா? எனும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தங்கலான் திரையில் விரிகிறது.

மொத்தமாக படம் எப்படி உள்ளது எனப் பேசுவதற்கு முன்பு, படத்தின் வேலைபாடுகளை, கலைஞர்களைப் பற்றி பேசுவது தங்கலானுக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது.

ஒரு இயக்குநராக பா.ரஞ்சித் வளர்ந்துகொண்டேயிருக்கிறார். தனது கதையை, கதாப்பாத்திரங்களைக் கச்சிதமாக திரையில் கொண்டுவருவது எல்லோருக்கும் சுலபமான விஷயமல்ல. ஆனால் அதில் கைதேர்ந்த ஆளாக எப்போதும் மிளிர்கிறார் ரஞ்சித். அதற்கு மிக முக்கிய பங்காற்றியிருப்பது நடிகர் நடிகையரின் தேர்வு.

விக்ரம், பார்வதியின் நடிப்பு யாராலும் அடித்துக்கொள்ள முடியாதபடி உள்ளது. உலகத் தரம்வாய்ந்த நடிப்பை வழங்கியுள்ளார் சியான் விக்ரம். ‘விக்ரம் எப்போதும் சூப்பராதான் நடிப்பார்’ என்ற சலிப்புகூட வராமல் ஒவ்வொரு படத்திலும் நமை ஆச்சரியப்பட வைப்பது அவருக்கு மட்டுமே தெரிந்த மேஜிக். விக்ரமுக்கு போட்டிபோட்டு திரையில் மிளிர்கிறார் பார்வதி. இதுவரை நாம் காணாத பார்வதியை இந்த படத்தில் காணலாம். பேசுவதிலும், அழுவதிலும் அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

துணை கதாப்பாத்திரங்களாக வரும் பசுபதி உள்ளிட்ட அனைத்து கதாப்பாத்திரங்களும் மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு நடித்திருப்பது பெரும் பாராட்டுக்கு உரித்தானதுதான். பரவசமளிக்கும் வகையில் மட்டுமே வலம்வந்த மாளவிகா மோகனன் பயமுறுத்தும் அவதாரம் எடுத்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் வரும் அவர், நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.  பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்துள்ள டேனியல், மற்ற படங்களில் வரும் வெள்ளைக்காரர்களைப் போலல்லாமல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குதறிப்போடும் தமிழ் பேசி, போலியான மிடுக்கைக் காட்டாமல், நல்ல கதாப்பாத்திரமாக திரையில் தெரிகிறார்.

படத்தில் இசை மிக முக்கிய பலமாகத் தெரிகிறது. பல இடங்களில் இசை இறங்கி விளையாடுகிறது. திரையை ஆட வைக்கும் பாடல்கள் ஜீ.வி.பிரகாஷ்ஷின் உழைப்பைக் காட்டுகின்றன. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பா.ரஞ்சித் பட வரிசைகளில் புதுமையைக் கொடுத்துள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், ஏமாற்றுமளவிலும் இல்லை. சண்டைக் காட்சிகளும் ஆரத்தியின் காட்சிகளிலும் கிராபிக்ஸ் சிறப்பாகவே உள்ளன. 

படத்தின் முதல்பாதி விறுவிறுவென நகர்ந்தாலும், இடைவேளையிலும் இரண்டாம் பாதியிலும் லேசான சலிப்பை கொடுக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சலிப்பு, கதைக்கு தேவையான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிறிய குழப்பத்தைத் தருகிறது.

இந்த ஆண்டின் முதல்பாதியில் வந்துபோன பெரும்பாலான படங்களோடு ஒப்பிடுகையில் இசையிலும், எழுத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும், கலை இயக்கத்திலும் தங்கலான் எனும் படைப்பு பிரமிக்க வைக்கும் ஒன்றாகவே தெரிகிறது.

மொத்தத்தில் புதிய அனுபவம் தரும் இந்த தங்கலான் திரைப்படத்தை கண்டிப்பாக திரையில் கண்டுகளிக்கலாம். ஹீரோவின், இயக்குநரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பிடித்த படமாகவும் மாறலாம். ஆனால் கமெர்ஷியல் விரும்பிகளுக்கு முழு திருப்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே. முக்கியமாக, அதிக ரத்தம், வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் குழந்தைகளுடன் படத்திற்கு செல்வதைத் தவிர்ப்பது மிக நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com