
மலையாளத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் நாயரின் தேர்ந்தெடுத்த ஒன்பது சிறுகதைகளைக் கொண்டு இந்த மனோரதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு திரைச் சித்திரமும் தொடங்குமுன் நடிகர் கமல்ஹாசன் தோன்றி ஒரு சிறிய அறிமுகத்தை ஏற்படுத்தித் தருகிறார். இந்த அறிமுகத்திலேயே எம்.டி.யின் மீதும் அவருடைய எழுத்துகளின் மீதும் கமல்ஹாசன் கொண்டிருக்கும் காதலும் வெளிப்படுகின்றன. குறிப்பிட்ட சிறுகதையின் அனுபவத்துடன் உலக வாழ்க்கையுடன் தன்னுடைய வாழ்க்கையையும் சம்பந்தப்படுத்திக்கூட சிலவற்றை அறிமுகப்படுத்துகிறார். காழ்ச்ச (Vision - பார்வை) பற்றிக் கூறும்போது பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றிய மருமக்கள்தாயத்துடன் சேர்த்துத் தன்னுடைய இரு மகள்களுக்குள்ள சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
தொடர் சித்திரங்களில் மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில் போன்றவர்கள் எல்லாமும்கூட நடித்திருக்கிறார்கள் என்றாலே எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மீது கேரளம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் வெளிப்படுகிறது.
தொடரின் முதல் படம் – ஓளவும் தீரவும் (அலைகளும் ஆற்றங்கரையும்). அறுபதுகளின் இந்தக் கதை கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டு காலத்தைக் கண்முன் கொண்டுவருவதாக இருக்கிறது. இன்றைய தொழில்நுட்பமும் இணைந்துகொள்ள கறுப்பு வெள்ளையிலும்கூட ஆறுகளும் மழைக் காட்சிகளும் நம்மை ஒன்றவைக்கின்றன.
யாருமில்லா பாபுட்டி (மோகன்லால்) ஒரு படகுக்காரன், இளம் வயதிலேயே தாயையும் தங்கையையும் விட்டு வெளியேறிவந்த நண்பனைச் சடலமாக அவர்களிடம் கொண்டு சேர்க்கிறான். அந்தப் பெண்கள், அவர்களுடைய வாழும் நிலை, நண்பனின் தங்கை நபீசா (துர்கா கிருஷ்ணா) உடன் பாபுட்டிக்கு ஏற்படும் நெருக்கம், தொடர்ந்து இடையீடும் முடிவும். கறுப்பு வெள்ளைப் படத்தில் நபீசாவுக்கு பாபுட்டி வளையல் அணிவிக்கும் காட்சியில், அந்த வளையல்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் காட்டப்படுகின்றன. திரையில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய காட்சி. முடிவு? சில காட்சிகளில் மோகன்லால் உள்பட அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார் துர்கா கிருஷ்ணா (இயக்கம் – பிரியதர்சன், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்).
தொடரின் இரண்டாவது சித்திரம் – கடுகன்னாவ – ஒரு யாத்திரைக் குறிப்பு. தமிழகத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் ஒரு காலத்தில் பிழைப்புக்காகவும் வணிகத்துக்காகவும் இலங்கைக்குச் சென்றவர்கள் ஏராளம். கேரளத்திலிருந்து சென்ற கொச்சியான்களில் (மலையாளிகளில்) ஒருவருக்கு (வினீத்) கடுகன்னாவிலும் ஒரு மனைவி போல. இடையே குடும்பத்தைப் பார்க்க வரும்போது ஒரு பெண் குழந்தையையும் அழைத்து வந்துவிட்டுப் போகிறார். பல காலத்துக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளனாகக் கொழும்பு செல்லும் வேணுகோபால் (மம்மூட்டி), சிறுமியாக மட்டும் பார்த்திருந்த தன் உடன்பிறவா சகோதரியைத் தேடி கடுகன்னாவ செல்கிறார். தொடர்ச்சிதான் கதை. கேரளத்தில் நடக்கிற கதையைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் பிரமாதம். அந்தச் சிறுமியின் நடிப்பும் அபாரம் (இயக்கம் - ரஞ்சித்).
மூன்றாவது காழ்ச்ச (பார்வை). சற்றும் பொருந்திவராத கணவனை விவாகரத்து செய்வதெனத் தீர்மானித்துவிட்டு சென்னையிலிருந்து தாயைப் பார்க்கக் கேரளத்திலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார் சுதா (பார்வதி திருவோத்து). அவருக்கு முன்னரே செய்தி சென்று சேர்ந்து விட்டிருக்கிறது. அம்மா முதற்கொண்டு ஊரில் பெண்கள் ஒவ்வொருவரும் அவரிடம் தெரிவிக்கும் யோசனைகள். கடைசியாக சுதா பார்க்கச் செல்லும் வயதில் மூத்த - பார்வை குறைந்த பாட்டிம்மா, மிக இயல்பாகத் தெரிவிக்கும் விஷயங்கள். பெண்கள் சுதந்திரம், முடிவெடுக்கும் உரிமை பற்றியெல்லாம் எந்தவித பிரசாரமும் இல்லாமலே சொல்லிச் செல்கிறது கதை.
அடடா, அந்தக் கிராமமும் சூழலும். அவ்வளவு ரம்மியம். சுதாவின் - பார்வதியின் கணவனாக வரும் நரேனும் அப்படியே அச்சடித்தாற்போல நடித்திருக்கிறார். முழுப்படமும் பார்வதியின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம், அப்படி நடித்திருக்கிறார். அத்தனை பாவங்களையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறது அவருடைய முகம் (இயக்கம் – சியாம்பிரசாத்).
நாலாவது சிலாலிகிதம் (கல்வெட்டு). வரலாற்றுப் பேராசிரியரான கோபாலன்குட்டி ஊர்க் கோயிலிலுள்ள கல்வெட்டைப் படிப்பதற்காக மகளுடன் சொந்த ஊருக்குச் செல்கிறான், அப்படியே அம்மாவையும் பார்க்க. ஊரில் ஆற்றுமேட்டில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் (நாராயணியின் மகள்) உயிருக்குப் போராடிக் கொண்டு கிடக்கிறாள்.
அவளைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஊர் (மக்கள்) என்னென்ன செய்கிறது? இந்தச் சிக்கலில் பேராசிரியர் எங்கெங்கே வருகிறார், எவ்வாறு சிறுத்துப் போகிறார்? சின்னப் பெண்ணான அவருடைய மகள் எவ்வாறு பெரிய மனுஷியாகத் தெரிகிறாள்? நாராயணி யார்? கிராமங்களைச் சும்மா கொண்டாடிக்கொண்டே இருக்கவும் முடியாது, இவர்களுக்குள் எத்தகைய வன்மங்கள் உறைந்துகிடக்கின்றன என்பதையும் வெளிப்படுத்தும் கதை. பேராசிரியராக பிஜு மேனன், தாயாக சாந்தி கிருஷ்ணா. சின்னச் சின்னப் பாத்திரங்களில்கூட பலரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் (இயக்கம் - பிரியதர்சன்).
ஐந்தாவது வில்பன (விற்பனை). சென்னையில் நாளிதழில் விற்பனைக்கு என வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்து பெசன்ட் நகரிலுள்ள ஒரு வீட்டுக்குச் செல்கிறான் பத்திரிகையாளனான சுநீல் தாஸ் (ஆசிப் அலி). கணவர் பரேக்கிற்கு இடமாற்றம் என்பதால் பொருள்களை எல்லாம் விற்பதாகக் கூறுகிறாள் திருமதி பரேக் (மதுபாலா). இருவருக்குமான உரையாடல்கள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கிறது. இருவருடைய வாழ்வின் பின்னணிகளும் விவரிக்கப்படுகின்றன. திருமதி பரேக்கின் கேள்விகள் சுநீல் தாஸை நோக்கியவை மட்டுமல்ல, எல்லாருமே பதில் சொல்ல வேண்டியவர்கள்தான். ஆனால், நாம் சந்திக்க நேர்கிற எல்லாருமே திரு பரேக் ஆகத்தான் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் மதுபாலாவின் நடிப்பில் அவருடைய அனுபவம் உச்சமாக வெளிப்படுகிறது. ஆசிப் அலியும் ஈடுசெய்ய முயலுகிறார். சிறப்பு. (இயக்கம் – அஸ்வதி நாயர், எம்.டி. வாசுதேவன் நாயரின் மகள்).
ஆறாவது ஷெர்லாக். குடிப் பழக்கத்துக்கு ஆளான நிலையில் வேலை தேடி இளைய அக்கா இருக்கும் அமெரிக்கா / கனடா செல்கிறான் பாலு. இந்தக் கதையையே ஃபகத் ஃபாசிலுக்காகவே எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதியதைப் போல இருக்கிறது. அவ்வளவு பொருத்தம், அத்தனை நடிப்பு. அமெரிக்காவில் வசிக்கும் அக்காவின் தனிப்பட்ட வாழ்வின் இறுக்கத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் நதியா. இன்றைய அக்காவுடன் அன்றைய அக்காவை நினைத்துப் பார்த்துத் துயரும் பாலு நினைவிலிருக்கிறான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஷிண்டே என்ற ஷெர்லாக் என்ற வளர்ப்புப் பூனையைத் துணையென அறிமுகப்படுத்தும் அக்கா, அவற்றின் நகங்கள் வெட்டப்பட்டுவிட்டன, இனி வளராது என்றதிலிருந்து கதையையும் சேர்த்துக் குறியீடாக நகர்த்திச் செல்கிறது ஷெர்லாக். இரண்டு பேரும் பூனையும் கொஞ்சம் உரையாடல்களும் – பிரமாதம் (இயக்கம் – மகேஷ் நாராயண்).
ஏழாவது கடல்காத்து. தொடரில் சற்று சுமாரான கதை. ஆனாலும் மனைவி, மகளின் – இரு பெண்களின் மனதை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. கர்ப்பிணியான மனைவியையும் மகளையும் விட்டுவிட்டு, பொய்க்காரணம் கூறி விருப்பமான ஒரு பெண்ணுடன் அருகிலுள்ள வேலைபார்க்கும் நகரிலேயே வசிக்க முனையும் கணவன் (இந்திரஜித் சுகுமாரன்). கர்ப்பிணி மனைவியாக அபர்ணா பாலமுரளி. நடிப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்றாலும் கடைசியான ஒரு காட்சியில் அபர்ணாதான் என்பதைக் காட்டுகிறார் (இயக்கம் – ரதீஷ் அம்பாட்).
எட்டாவது அபயம் தேடி வீண்டும். எப்போதோ விட்டுப் போன ஊரைத் தேடித் திரும்பி வரும்போது யாரும் யாருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கப் போக, நினைவிலாடுகிறாள் அந்தப் பெண், எப்போதும். நினைவுகளும் நிஜமுமாக பின்னும் முன்னுமாக நகர்கிறார் அந்த மனிதர் (சித்திக்). வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்ற நெருக்குதலுடன், கடைசியாக வருகிறார் வீட்டின் அந்த உரிமையாளர். மிகச் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் கதையில் சித்திக் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கவனமாகப் பார்க்க வேண்டிய படம். (இயக்கம், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்).
ஒன்பதாவது ஸ்வர்க்கம் திறக்குன்ன சமயம். இதை இந்தத் தொடரின் உச்சம் என்றாலும் மிகையில்லை. மரணப் படுக்கையில் மாஸ்டர் மாதவன் (மறைந்த நெடுமுடி வேணு – படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்திருக்கும்போல). ஊரிலுள்ள ஒவ்வொருவரையும் மரணத்தின்போது வழியனுப்பிவைக்கும் குட்டி நாராயணன் (இந்திரன்ஸ்) அழைக்கப்படுகிறார். மரணத்தை எதிர்கொள்ள மகள்கள், உறவினர்கள் எல்லாரும் வெளியூர்களிலிருந்து வருகிறார்கள். நெருக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் எல்லாரும் தொலைவில்தான் இருக்கிறார்கள். வயதான மனைவி மட்டும் அருகில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஆளுக்கொரு வேலை எப்போது முடியும், எப்போது ஊர் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு. கதையின் முடிவில் என்ன நடக்கிறது? படத்தின் செய்தி என்ன? மிக யதார்த்தமாக நகர்த்தப்படுகிறது. யாருக்கும் எவ்விதக் குற்றவுணர்வும் இல்லை, இன்றைய நவநாகரிக உலகத்தைப் போலவே.
குட்டி நாராயணன் வருவதுடன் தொடங்கி, புறப்பட்டுச் செல்வதுடன் முடிகிறது கதை. படம் நெடுகிலும் இந்திரன்ஸின் நடிப்பு, எங்கேயோ இருக்க வேண்டியவர். அதுவும் மாதவனின் மகள்கள் புறப்பட்டுச் செல்லும்போது, இவருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல்போனதும் தெரியும் ஏமாற்றமும்! பேசும் முகம்! (இயக்கம் – ஜெயராஜன் நாயர்).
இந்தக் கதையை மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தும் நடிகர் கமல்ஹாசன் நிறைவில் வந்து சிறிது பேசி தொடரையும் முடித்துவைக்கிறார்.
தொடரை ஒருசேரப் பார்க்கலாம். பார்க்க வேண்டும். தனித்தனிக் கதைகள் என்றாலும் ஏதோவொரு வகையில் எல்லாமும் நாவலாக இணைந்திருக்கின்றன. சில கதைகள் தவிர பெண்களின் உலகம் என்றும்கூட கூறலாம்.
ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர் முழுவதும் ஒளிப்பதிவும் பார்வையாளர்களுடன் கூடவே பயணம் செய்து வருகிறது. திரைப்படத்துக்கான அக்கறையைவிடக் கூடுதலாகச் செலுத்திச் செதுக்கியிருக்கிறார்கள் இந்தச் சித்திரங்களை.
எம்.டி. வாசுதேவனின் நாவல்கள் பலவற்றை வாசித்திருந்தாலும் அந்த அளவுக்குச் சிறுகதைகளைப் படிக்க வாய்க்கவில்லை. இந்தச் சிறுகதைகளின் அறிமுகமின்மை இந்தத் தொடர் திரைச் சித்திரங்களைப் புரிந்துகொள்வதில் பார்வையாளர்களுக்குச் சில இடங்களில் சிரமத்தை ஏற்படுத்தினாலும், அதுவே ஏற்கெனவே தெரிந்தவற்றைத் திரையிலும் எதிர்பார்க்கிற ஆபத்தையும் இல்லாமலாக்கிவிடுகிறது, ஒருவகைக்கு நன்மையும்கூட.
ஒட்டுமொத்தமாக இந்த மனோரதங்களைப் பார்த்து முடிக்கும்போது கேரளத்தின் கிராமங்கள் சிலவற்றுக்குள் சென்று சில வாரங்கள் தங்கிவிட்டு வந்ததைப் போன்ற உணர்வு நிரம்பிவழிகிறது, கூடவே புத்துணர்வும் (தமிழில் எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? இப்படியெல்லாம் வரக்கூடாதா? என்ற நினைப்பையும் தவிர்க்க முடியவில்லை).
[மனோரதங்கள் -தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.